200 பேருக்கு கண் பார்வை பாதிப்பு: ஒலிபெருக்கி உரிமையாளரை கைது செய்ய போலீசார் தீவிரம்


200 பேருக்கு கண் பார்வை பாதிப்பு: ஒலிபெருக்கி உரிமையாளரை கைது செய்ய போலீசார் தீவிரம்
x
தினத்தந்தி 19 March 2018 3:00 AM IST (Updated: 18 March 2018 11:53 PM IST)
t-max-icont-min-icon

ஏர்வாடி அருகே பள்ளிக்கூட ஆண்டு விழாவில் 200 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது தொடர்பாக ஒலிபெருக்கி உரிமையாளரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

வள்ளியூர்,

ஏர்வாடி அருகே பள்ளிக்கூட ஆண்டு விழாவில் 200 பேருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது தொடர்பாக ஒலிபெருக்கி உரிமையாளரை கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். மாணவர்களுக்கு 2-வது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

200 பேருக்கு பார்வை பாதிப்பு

நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே பொத்தையடியில் உள்ள எஸ்.வி. இந்து தொடக்கப்பள்ளியின் ஆண்டு விழா, பள்ளிக்கூடத்தில் உள்ள ஒரு வகுப்பறையில் வைத்து நடத்தப்பட்டது. இதையொட்டி அந்த அறையில் அதிக வெளிச்சம் கொண்ட மெர்க்குரி மின்விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.

மாணவ-மாணவிகள், அவர்களது பெற்றோர்கள் மற்றும் ஆசிரிய-ஆசிரியைகள் வந்து அந்த அறையில் அமர்ந்து விழாவை கண்டுகளித்தனர். விழா முடிந்ததும் அனைவரும் வீட்டிற்கு சென்று விட்டனர். பின்னர் இரவில் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் கண்களும் வீக்கம் உண்டாகி, சிகப்பு நிறமாகியது. மாணவர்கள், பெற்றோர்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோருக்கு கண் பார்வை பாதிக்கப்பட்டது.

மருத்துவ முகாம்

இதையடுத்து அவர்கள் நெல்லை சந்திப்பில் உள்ள அரவிந்த் கண் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வீடு திரும்பினார்கள். இதுதொடர்பாக ஏர்வாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கூட தாளாளர் பாலசுப்பிரமணியனை கைது செய்தனர். இதற்கிடையே, விழாவில் மின்விளக்குகள் பொருத்திய ஒலிபெருக்கி உரிமையாளரான பொத்தையடியைச் சேர்ந்த ரமேஷ் (வயது 38) என்பவர் தலைமறைவாகி விட்டார்.

இந்த நிலையில் பொத்தையடி கிராமத்தில் கலெக்டர் சந்தீப் நந்தூரி உத்தரவுப்படி மருத்துவ முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, பொத்தையடியில் உள்ள எஸ்.வி. இந்து தொடக்க பள்ளிக்கூடத்தில் நேற்று காலையில் டாக்டர்கள் குழுவினர் முகாமிட்டனர். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கலைஅரசி தலைமையில் டாக்டர்கள், நர்சுகள் என 10-க்கும் மேற்பட்டவர்கள் முகாமில் கலந்து கொண்டனர். அவர்கள் 2-வது நாளாக பாதிக்கப்பட்ட மாணவ- மாணவிகள், பெற்றோர்களுக்கு கண்களில் சொட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி சிகிச்சை அளித்தனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இந்த மருத்துவ முகாம் இன்றும் (திங்கட்கிழமை) நடக்கிறது.

கைது செய்ய தீவிரம்

இதற்கிடையே, தலைமறைவாக உள்ள ஒலிப்பெருக்கி உரிமையாளர் ரமேசை கைது செய்ய ஏர்வாடி போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவர் உறவினர் வீடுகளில் எங்கும் பதுங்கி இருக்கிறாரா? அல்லது வெளியூரில் பதுங்கி இருக்கிறாரா? என்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story