நள்ளிரவில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் போலீஸ் ஏட்டு பலி 4 பேர் படுகாயம்


நள்ளிரவில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் போலீஸ் ஏட்டு பலி 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 19 March 2018 4:30 AM IST (Updated: 19 March 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

தொட்டியத்தில் கார்-லாரி நேருக்கு நேர் மோதியதில் போலீஸ் ஏட்டு உடல் நசுங்கி பலியானார். மேலும் 2 போலீஸ் ஏட்டுகள் உள்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தொட்டியம்,

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் இடக்கீழையூர் தெற்குதெருவை சேர்ந்தவர் துரைராஜ் (வயது 45). இவர் கோட்டூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணிபுரிந்து வந்தார். இவரும் அதே கிராமத்தை சேர்ந்த ராமமூர்த்தி(65), கவியரசு(47), மன்னார்குடி அரியாவூரை சேர்ந்த கரிகாலன்(38), செந்தில்நாதன்(42) ஆகியோரும் ஒரு காரில் நேற்று முன்தினம் டைல்ஸ் வாங்குவதற்காக ஓசூர் சென்றுவிட்டு இரவில் தங்களது ஊருக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை துரைராஜ் ஓட்டினார். கார் நள்ளிரவில் திருச்சி-நாமக்கல் சாலையில் தொட்டியம் போலீஸ் நிலையத்தை தாண்டி சில அடி தூரத்தில் வந்து கொண்டிருந்தது. இதே போல் முசிறியில் இருந்து சேலத்திற்கு மரவள்ளி கிழங்கு ஏற்றிக் கொண்டு ஒரு லாரி வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக காரும், லாரியும் நேருக்கு, நேர் மோதிக்கொண்டன.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காரில் வந்த துரைராஜ், ராமமூர்த்தி, கவியரசு, கரிகாலன், செந்தில்நாதன் ஆகிய 5 பேரும் படுகாயமடைந்தனர். இந்த விபத்தை பார்த்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு திருச்சி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி துரைராஜ் நேற்று அதிகாலை பரிதாபமாக இறந்தார்.

மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் படுகாயம் அடைந்த கரிகாலன் நீடாமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாகவும், செந்தில்நாதன் மன்னார்குடி துலையாமங்கலம் போலீஸ் நிலையத்தில் ஏட்டாகவும் பணியாற்றி வருகின்றனர். இந்த விபத்து குறித்து தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story