குரங்கணி தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி: சாவு எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது


குரங்கணி தீ விபத்தில் மேலும் ஒருவர் பலி: சாவு எண்ணிக்கை 17-ஆக உயர்ந்தது
x
தினத்தந்தி 19 March 2018 4:30 AM IST (Updated: 19 March 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு வாலிபர் நேற்று பலியானார். இதனால் இந்த தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

மதுரை,

குரங்கணி காட்டுத் தீயில் சிக்கி மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஈரோடு வாலிபர் நேற்று பலியானார். இதனால் இந்த தீ விபத்தில் சாவு எண்ணிக்கை 17 ஆக உயர்ந்துள்ளது.

தேனி மாவட்டம், குரங்கணி காட்டுப்பகுதியில் கடந்த 11-ந்தேதி தீப்பிடித்தது. இந்த பயங்கர விபத்தில் மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 36 பேர் சிக்கிகொண்டனர். இதில் பலர் உயிருடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மறுநாள் காட்டுப்பகுதியில் இருந்து 9 பேர் சடலமாக மீட்கப்பட்டனர்.

மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 3 பேர் அடுத்தடுத்த நாட்களில் உயிரிழந்திருந்தனர். இதனைத் தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் மற்றும் சென்னையைச் சேர்ந்த அனுவித்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக மரணமடைந்தனர்.

மேலும் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த திருப்பூரைச் சேர்ந்த சத்யகலா மற்றும் சேலம் எடப்பாடியை சேர்ந்த தேவி ஆகிய இருவரும் கடந்த 16-ந்தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம், சாவு எண்ணிக்கை 16 ஆக அதிகரித்தது.

இந்த நிலையில் மதுரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஈரோட்டை சேர்ந்த சதீஷ்குமார் (வயது 29) சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது.

இறந்த சதீஸ்குமாரின் உடல் நேற்று மதியம் 2 மணிஅளவில் சித்தோட்டில் உள்ள அவருடைய வீட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு உடலுக்கு உறவினர்கள், நண்பர்கள், சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்தவர்கள் அஞ்சலி செலுத்தினார்கள். அதன்பின்னர் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டு அவருடைய உடல் தகனம் செய்யப்பட்டது.

காட்டுத்தீக்கு இரையான சதீஸ்குமார் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அவருடைய தந்தை ராமசாமி சித்தோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூட வேன் டிரைவராக உள்ளார். தாய் மலர்விழி என்கிற மோகனம்பாள், தங்கை பிரியா. சதீஸ்குமார் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு சரண்யா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. சரண்யா கோவாவில் உள்ள ஒரு தனியார் ஏற்றுமதி நிறுவனத்தில் தர பரிசோதகராக பணியாற்றி வருகிறார்.

சதீஸ்குமார் இயற்கை வளத்தை மேம்படுத்துவதில் அதிக ஆர்வமுடையவர் எனவும், பசுமையை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வந்ததாகவும் உறவினர்கள் கூறினார்கள்.

Next Story