இந்தியாவிலேயே முதன் முறையாக தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை


இந்தியாவிலேயே முதன் முறையாக தனுஷ்கோடி கடல் பகுதியில் காற்றாலை
x
தினத்தந்தி 19 March 2018 4:15 AM IST (Updated: 19 March 2018 12:31 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவிலேயே முதல் முறையாக தனுஷ்கோடி கடல் பகுதியில் ரூ.300 கோடி மதிப்பில் காற்றாலை அமைக்கப்படவுள்ளதாக மத்திய எரிசக்தி துறையின் இணை செயலாளர் கூறினார்.

ராமேசுவரம்,

ராமேசுவரத்தில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது தனுஷ்கோடி கடல் பகுதி. தமிழகத்திலேயே தனுஷ்கோடி பகுதியில்தான் காற்றின் வேகம் எல்லா சீசனிலும் அதிகமாக இருக்கும். கம்பிபாடுக்கும்-அரிச்சல்முனைக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதியில் ராட்சத டவர் ஒன்று அமைக்கப்பட்டு கடந்த 3 வருடங்களுக்கும் மேலாகவே காற்றின் தன்மை மற்றம் வேகம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தனுஷ்கோடி பகுதியில் காற்றாலை அமைக்க மத்திய அரசு முடிவு செய்து உள்ளது.

இது குறித்து ஆய்வு செய்வதற்காக டெல்லியில் இருந்து மத்திய அரசின் மரபுசாரா எரிசக்தி துறையின் இணை செயலாளர் பானு பிரதாப் யாதவ், வருகை தந்தார். கம்பிப்பாடு, அரிச்சல்முனைக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதியில் காற்றின் வேகத்தை கணக்கிடுவதற்காக வைக்கப் பட்டுள்ள கோபுரத்தை பார்வையிட்டதுடன், அரிச்சல்முனை கடற்கரை மற்றும் கடல் பகுதிகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தனுஷ்கோடி கடலில் காற்றாலை மின்சார திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது. இங்கு காற்றாலை அமைப்பதற்கான சூழ்நிலை உள்ளது. இந்தியாவிலேயே முதல் முறையாக தனுஷ்கோடி கடல் பகுதியில்தான் காற்றாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக ரூ.300 கோடியில் திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு மத்திய அரசின் பரிந்துரைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. 5 இடங்களில் காற்றாலைகளை நிறுவ திட்டமிடப்பட்டு உள்ளது. ஒவ்வொரு காற்றாலையில் இருந்தும் 6 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதை இலக்காக வைத்துள்ளோம். கடலில் காற்றாலை அமைப்பது குறித்து கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாகவே மத்திய அரசால் ஆய்வு நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story