தங்கத்தாலி, வெள்ளிக்கொலுசுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்


தங்கத்தாலி, வெள்ளிக்கொலுசுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்
x
தினத்தந்தி 19 March 2018 4:15 AM IST (Updated: 19 March 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

தங்கத்தாலி, வெள்ளிக்கொலுசு போன்ற பொருட்களுக்கு ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், என நாமக்கல்லில் நடந்த தமிழ்நாடு தங்கம்,வெள்ளி, வைரம் நகை வியாபாரிகள் சம்மேளன கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாமக்கல்,

தமிழ்நாடு தங்கம், வெள்ளி, வைரம் நகை வியாபாரிகள் சம்மேளனத்தின் 6-வது காரிய கமிட்டி கூட்டம் நேற்று நாமக்கல்லில் நடந்தது. கூட்டத்துக்கு சம்மேளனத்தின் துணை தலைவர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நாமக்கல் நகர ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்க துணை தலைவர் எம்.எஸ்.சிவஞானம் வரவேற்று பேசினார். அச்சங்கத்தின் தலைவர் டி.சிவஞானம் முன்னிலை வகித்தார். சம்மேளனத்தின் வரவு-செலவு கணக்குகளை பொருளாளர் மோகனசுந்தரம் தாக்கல் செய்தார்.

இதில் சம்மேளனத்தின் செயலாளர் லோகநாதன், மேலாளர் லட்சுமி நாராயணன், நாமக்கல் நகர ஷராப் மற்றும் நகை வியாபாரிகள் சங்க செயலாளர் கருமலை, பொருளாளர் பாலாஜி, இணை செயலாளர்கள் ராம சீனிவாசன், சுரேஷ்குமார், முன்னாள் நகர்மன்ற தலைவர் து.சு.மணியன், நாமக்கல் மாவட்ட வணிகர் சங்க பேரவை தலைவர் பெரியசாமி, ஓய்வுபெற்ற கலால்துறை அதிகாரி மனோகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விவரம் வருமாறு :-

மத்திய அரசு ஜி.எஸ்.டி.யில் இருந்து தங்கத்தாலி மற்றும் வெள்ளி அரைஞாண்கொடி, வெள்ளிக்கொலுசு, வெள்ளி மெட்டி ஆகியவற்றிற்கு விலக்கு அளித்து பழைய பாரம்பரிய பண்பாட்டு கலாசாரத்தை காக்க வேண்டும்.

மத்திய அரசு கொண்டு வருவதாக இருக்கும் தங்கம் மேம்பாட்டு திட்டத்தில் தங்க வியாபாரிகளுக்கும் , தங்க ஆபரண தயாரிப்பாளர்களுக்கும் சிரமம் இல்லாத சலுகைகள் அடங்கிய திட்டங்கள் இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.

மத்திய அரசு சீட்டுக்கள் பிடிப்பது சம்பந்தமாக கொண்டு வர உள்ள சட்ட திருத்தம் நகை கடை மற்றும் நகை வியாபாரிகள், தொழிலாளர்கள் பாதிக்காத முறையில் இருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

Next Story