ரூ.1 கோடியே 34 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது வாலிபர் கைது


ரூ.1 கோடியே 34 லட்சம் வெளிநாட்டு பணம் சிக்கியது வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 March 2018 3:45 AM IST (Updated: 19 March 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் இருந்து துபாய்க்கு கடத்த முயன்ற ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக வாலிபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பெரும் அளவில் வெளிநாட்டு பணம் கடத்தப்பட இருப்பதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சென்னையில் இருந்து துபாய்க்கு சென்ற விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த செய்யது தூரபுதீன்(வயது 27) என்பவர் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு விமானத்தில் செல்ல காத்திருந்தார். அவர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் விசாரித்தனர்.

அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், சோதனைகள் முடித்து விமானத்தில் ஏற்றப்பட்டு இருந்த அவரது உடமைகளை கீழே இறக்கி மீண்டும் சோதனை செய்தனர்.

அதில் சவுதி, ரியால் கரன்சிகள், குவைத், பக்ரைன் ஆகிய நாடுகளின் தினார் கரன்சிகள் என கட்டுக்கட்டாக இருந்தது அவற்றை மறைத்து வைத்து துபாய்க்கு கடத்த முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அவரிடம் இருந்து ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.


பின்னர் செய்யது தூரபுதீனின் விமான பயணத்தை ரத்துசெய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணைக் காக அழைத்துச்சென்றனர்.

துபாய்க்கு கோடிக்கணக்கில் கடத்தப்பட இருந்த ஹவாலா பணமா?, இந்த கடத்தல் பின்னணியில் சர்வதேச ஹவாலா கடத்தல் கும்பலுக்கு தொடர்பு இருக்கிறதா? என கைதான செய்யது தூரபுதீனிடம் சுங்க இலாகா அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story