ரேஷன் பருப்பு மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது


ரேஷன் பருப்பு மூட்டைகள் ஏற்றிச்சென்ற லாரி சாலையில் கவிழ்ந்தது
x
தினத்தந்தி 19 March 2018 4:00 AM IST (Updated: 19 March 2018 1:13 AM IST)
t-max-icont-min-icon

செங்குன்றத்தில் இருந்து 420 மூட்டை ரேஷன் பருப்புகளை ஏற்றிக்கொண்டு சேலம் நோக்கி நேற்று காலை சென்றுகொண்டிருந்த லாரி சாலையில் கவிழ்ந்தது.

தாம்பரம்,

தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் சாலையில் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே சாலை வளைவில் வேகமாக திரும்ப முயற்சித்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, சாலையில் கவிழ்ந்தது.  லாரியை மதுரை மாட்டுத்தாவணி பகுதியைச் சேர்ந்த நல்லமாயவன்(வயது 23) என்பவர் ஓட்டிச்சென்றார். நல்லவேளையாக டிரைவர் காயமின்றி உயிர்தப்பினார். இந்த விபத்தில் லாரியில் இருந்த பருப்பு மூட்டைகள் அனைத்தும் தாம்பரம்-மதுரவாயல் பைபாஸ் மற்றும் பெருங்களத்தூர்-தாம்பரம் ஜி.எஸ்.டி. சாலையில் சரிந்து விழுந்தது. அதில் சில மூட்டைகளில் இருந்த பருப்புகள் அனைத்தும் சாலையில் சிதறியது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த தாம்பரம் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயவேல் தலைமையிலான போலீசார் மற்றும் நெடுஞ்சாலை ரோந்து போலீசார், சாலையில் கிடந்த பருப்பு மூட்டைகள் மற்றும் சாலையில் சிதறிக்கிடந்த பருப்புகளை அகற்றி சாலையோரம் ஒதுக்கி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அதன்பிறகு சாலையில் கவிழ்ந்து கிடந்த லாரி, கிரேன் மூலம் தூக்கி அப்புறப்படுத்தப்பட்டது. இதுபற்றி குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் லாரி டிரைவர் நல்லமாயவனிடம் விசாரித்து வருகின்றனர்.

Next Story