அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது


அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது
x
தினத்தந்தி 19 March 2018 3:30 AM IST (Updated: 19 March 2018 4:06 AM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே சரக்கு ரெயில் தடம் புரண்டது. இதனால் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் தாமதமாக சென்றன.

அரக்கோணம்,

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் இருந்து ஆந்திர மாநிலம் கம்மம் பகுதிக்கு நேற்று முன்தினம் சரக்கு ரெயில் ஒன்று 41 பெட்டிகளில் உரம் ஏற்றிக் கொண்டு சென்று கொண்டு இருந்தது.

ரெயிலில் டிரைவர் அனில்மிச், உதவி டிரைவர் தனஞ்ஜெயகுமார், கார்டு வீரேந்திரசாகு ஆகியோர் இருந்தனர். சரக்கு ரெயில் நேற்று காலை வேலூர் மாவட்டம் அரக்கோணத்தை அடுத்த மேல்பாக்கம் யார்டு பகுதி அருகே தண்டவாள கிராசிங் பகுதியில் மெயின் லைனில் இருந்து ‘லூப்’ லைனிற்கு சென்று கொண்டிருந்தது.

ரெயில் என்ஜினில் இருந்து 10 பெட்டிகள் லூப் லைனிலும், மீதமுள்ள 31 பெட்டிகள் மெயின் லைனிலும் சென்று கொண்டிருந்தபோது ரெயிலில் இருந்து வித்தியாசமான சத்தம் கேட்டு ரெயிலை டிரைவர்கள் நிறுத்தினார்கள்.

பின்னர் ரெயிலில் சத்தம் வந்த பகுதிக்கு சென்று பார்த்தபோது ரெயில் என்ஜினில் இருந்து 7, 8-வது பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கி தடம் புரண்டு இருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்து அரக்கோணம் ரெயில் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சரக்கு ரெயில் தடம் புரண்டதால் திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை செல்லும் திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ், பெங்களூருவில் இருந்து சென்னை செல்லும் லால்பாக் எக்ஸ்பிரஸ், சதாப்தி எக்ஸ்பிரஸ், ஹூப்ளியில் இருந்து சென்னை செல்லும் ஹூப்ளி எக்ஸ்பிரஸ், ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் பாஸ்ட் பாசஞ்சர் ரெயில், 2 சரக்கு ரெயில்கள் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்டன.

சரக்கு ரெயில் தடம் புரண்ட பகுதிக்கு தலைமை பாதுகாப்பு அதிகாரி, தலைமை பொறியாளர், உதவி கோட்ட மேலாளர், முதன்மை கோட்ட பொறியாளர், கோட்ட பாதுகாப்பு அதிகாரி, ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் மற்றும் பாதுகாப்பு படை வீரர்கள், ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே ஊழியர்கள் சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

ரெயிலில் தடம் புரண்ட 7, 8-வது பெட்டி மற்றும் அதற்கு இணைப்பாக அருகில் இருந்த 9, 10 ஆகிய பெட்டிகளை தவிர்த்து ரெயில் என்ஜின் பக்கம் இருந்த 6 பெட்டிகளை பிரித்தனர்.

அதுபோல் தடம் புரண்ட ரெயில் பெட்டிகளுக்கு பின்பக்கம் இருந்த 31 பெட்டிகள் மாற்று என்ஜின் கொண்டு பிரிக்கப்பட்டது. மெயின் லைன், லூப் லைனில் இருந்து பிரிக்கப்பட்ட 37 பெட்டிகளையும் இணைத்து சரக்கு ரெயில் அரக்கோணம் யார்டு பகுதிக்கு புறப்பட்டு சென்றன.

பின்னர் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு நூற்றுக்கணக்கான ரெயில்வே ஊழியர்கள், சிப்பந்திகள் லூப்லைனில் தடம் புரண்டு நின்ற சரக்கு ரெயில் பெட்டிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மெயின் லைனில் இருந்த சரக்கு ரெயில் பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டதால் ஆங்காங்கே நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் ஒவ்வொன்றாக சென்னை நோக்கி தாமதமாக புறப்பட்டு சென்றது.

சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக எக்ஸ்பிரஸ் ரெயில்கள் நடுவழியில் நிறுத்தப்பட்டதால் ரெயிலில் பயணம் செய்த பயணிகள் கடும் அவதியடைந்தனர்.

சரக்கு ரெயில் தடம் புரண்டது குறித்து ரெயில்வே அதிகாரிகள், ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story