தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத் யாத்திரைக்கு எதிர்ப்பு; செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு


தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத் யாத்திரைக்கு எதிர்ப்பு; செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு
x
தினத்தந்தி 19 March 2018 9:10 PM IST (Updated: 19 March 2018 9:38 PM IST)
t-max-icont-min-icon

விஎச்பி யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவிக்கப்பட்டதை அடுத்து செங்கோட்டை, தென்காசியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. #VHP #Section144


சென்னை,


விஸ்வ இந்து பரிஷத்தின் (விஎச்பி) ராமராஜ்ஜிய ரத யாத்திரை தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. இந்த ரதயாத்திரை தமிழகத்தின் பல பகுதிகளுக்களிலும் செல்ல திட்டமிட்டுள்ளது என கூறப்படுகிறது.

அயோத்தியில் ராமஜென்ம பூமியில் ராமர்கோயில் கட்டுவது, ராமராஜ்யத்தை மீண்டும் அமைத்தல், கல்வி பாடத்திட்டத்தில் ராமாயணம், உலக இந்து தினம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ரத யாத்திரை நடைபெற்று வருகிறது.

மத்திய பிரதேசம், மராட்டியம், கர்நாடகா, கேரளா வழியாக வரும் இந்த யாத்திரை ராமேஷ்வரத்தில் முடிவடைகிறது. இந்த யாத்திரையை தமிழகத்தில் முன்னெடுக்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.  இவ்விவகாரம் இன்று தமிழக சட்டசபையில் எதிரொலித்தது. தமிழகத்தில் விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்க கோரி தமிழக சட்டப்பேரவையில் இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவர சபாநாயகர்அனுமதி மறுத்தார். இதனால் கருணாஸ், தனியரசு, தமிமுன் அன்சாரி, அபுபக்கர் ஆகிய எம்எல்ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழகத்தில் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், கலவரங்கள் ஏற்படும், சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்படும் என அவர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது.

இப்போது திமுக விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரையை தமிழகத்திற்குள் நுழைய விடாமல் அதிமுக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என 
வலியுறுத்தி உள்ளது. இந்துத்துவா அமைப்புகளை எச்சரித்து அரசியல் சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும். பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் திட்டமிட்ட நடவடிக்கை விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை மேற்கொள்கிறது. விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை தமிழகத்திற்குள் மீறி நுழைந்தால் கைது செய்து உத்தரப்பிரதேசத்துக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என மு.க. ஸ்டாலின் கூறிஉள்ளார். 

விஎச்பி யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என பல்வேறு கட்சிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் 
விஸ்வ இந்து பரிசத் அமைப்பின் ரத யாத்திரை வருவதை முன்னிட்டு நெல்லை மாவட்டம் செங்கோட்டை, தென்காசிக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. மாவட்ட ஆட்சியர் உத்தரவை பிறப்பித்து உள்ளார். 

Next Story