கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு


கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் போலீசார் குவிக்கப்பட்டதால் பரபரப்பு
x
தினத்தந்தி 20 March 2018 3:45 AM IST (Updated: 20 March 2018 12:12 AM IST)
t-max-icont-min-icon

பயணிகள் மீண்டும் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் பரவியதால் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் 100 போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

வண்டலூர்,

செங்கல்பட்டு ரெயில் நிலையத்தில் இருந்து தாம்பரம் நோக்கி காலை நேரங்களில் செல்லும் மின்சார ரெயில்கள் மற்றும் விரைவு மின்சார ரெயில்கள் அனைத்தும் தினமும் காலதாமதமாக வருவதை கண்டித்து கடந்த 15-ந்தேதி கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் மின்சார ரெயில்களை மறித்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் ரெயில்வே அதிகாரிகள் மற்றும் போலீசார் பயணிகளின் சில கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டதால் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அன்றயை தினம் சுமார் 3 மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் பயணிகளும், பொதுமக்களும் ரெயில்களை மறித்து போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தகவல் காட்டுத் தீப்போல் வேகமாக பரவியது.

இதையடுத்து முன்னெச்சரிக்கையாக நேற்று காலை 7 மணியளவில் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையத்தில் வண்டலூர், செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டுகள் தலைமையில் தமிழக போலீஸ் மற்றும் ரெயில்வே போலீசார் என 100 பேர் குவிக்கப்பட்டு இருந்தனர். இதனால் கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் பெரும் பரபரப்புடன் காணப்பட்டது.

காலை 10.30 மணி வரை தொடர்ந்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் பயணிகள் யாரும் மறியல் போன்ற போராட்டங்களில் ஈடுபடவில்லை. இதையடுத்து தமிழக போலீசார் மட்டும் அங்கிருந்து சென்று விட்டனர். ரெயில்வே போலீசார் தொடர்ந்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர்.

Next Story