காரங்காடு, சேந்தனேந்தல் பகுதிகளில் கையால் இறால் பிடிக்கும் கிராம மக்கள்


காரங்காடு, சேந்தனேந்தல் பகுதிகளில் கையால் இறால் பிடிக்கும் கிராம மக்கள்
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமங்களில் கையால் இறால், மீன்பிடிக்கும் முறையை அப்பகுதி கிராம மக்கள் கடை பிடித்து வருகின்றனர்.

தொண்டி,

திருவாடானை தாலுகா காரங்காடு மற்றும் சேந்தனேந்தல் கடற்கரை கிராமங்களில் மிகப்பெரிய ஆறான கோட்டைக்கரை ஆற்றில் வரும் உபரி நீர் கிழக்கு கடற்கரை சாலையை கடந்து கடலில் கலக்கிறது. இப்பகுதியில் கடல்நீரும், ஆற்று நீரும் சங்கமிக்கும் பகுதியில் கையால் இறால் மீன் பிடிக்கும் பழக்கம் இன்றளவும் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்த வகை மீன் பிடிப்பில் ஈடுபடும் நபர்கள் கடலோர கிராமங்களில் வசிக்க கூடியவர்களே. இவர்களில் பெரும்பாலானவர்கள் மீனவர்கள் அல்லாத விவசாய பணிகளில் ஈடுபடுபவர்களாக தான் இருந்து வருகின்றனர்.

இது ஒருவகையான பொழுது போக்கு எனவும் ஒரு காலத்தில் இப்படி பிடிக்கப்படும் இறால் மீன்கள் வீட்டிற்கு தேவையானது போக விற்பனை செய்யப்படுவதும் வழக்கமாக இருந்து வந்துள்ளது. இந்த வகை மீன்பிடிப்பில் ஈடுபடும் பெண்கள் கையால் இறால் மீன் பிடிக்கும் சமயங்களில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் விலை உயர்ந்த சுமார் ஒரு கிலோவுக்கு மேல் இருக்கும் சம்பா நண்டுகளும் கிடைக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறுகின்றனர். பெரும்பாலும் கடல் உள்வாங்கும் நேரத்தில் தான் அதிக அளவில் இப்படி இறால் பிடிக்க செல்வார்களாம்.

பழையமுறைப்படி பரி என்று அழைக்க கூடிய பனை ஓலையால் பின்னப்பட்ட கூடை ஒன்றை தலையில் கட்டி பின்பக்கமாக தொங்கவிட்டு கொள்கின்றனர். சுமார் 5 நபர்களுக்கு மேல் அதிகபட்சமாக 10 நபர்கள் வரிசையாக தண்ணீரில் இறங்கி உட்கார்ந்து கொண்டு 2 கைகளாலும் தண்ணீருக்குள் தடவியபடி இறாலை தேடுகின்றனர்.

அப்போது அவர்களின் கையில் தட்டுப்படும் இறாலை பிடித்து கூடையில் போட்டுக்கொள்கின்றனர். இந்த முறையில் பெரும்பாலும் கூனி என அழைக்கப்படும் வெள்ளை நிறத்திலான சிறிய வகை இறால்களே அதிகம் கிடைக்கிறது.

சில நேரங்களில் கூடுதல் விலை போகும் கருப்பு நிற இறால் வகைகளும் கிடைப்பது உண்டு. சராசரியாக ஒரு நபர் அதிகபட்சமாக 2 முதல் 3 கிலோ வரை பிடித்து விடுவதாகவும், இப்படி பிடிக்கப் படும் இறால் அதிக சுவையுடன் இருக்கும் என்றும் கூறுகின்றனர். மேலும் சில நேரங்களில் சிலேபி கெண்டை, கெடுத்தல், மணலை, சிரையா போன்ற சிறிய வகை மீன்களும் பிடிபடுவதுண்டு. ஆனால் பல நேரங்களில் கையால் தடவி இறால் பிடிக்கும் போது நண்டுகள் கடித்து விடுவதும், பல நேரங்களில் கண்ணுக்கு தெரியாமல் கடலுக்குள் கத்தியை விட கூர்மை தன்மை கொண்ட ஆக்கு என அழைக்கப்படும் ஒரு வகை கடல் வாழ் உயிரினம் வெட்டி பெரும் காயங்களை உருவாக்கி விடுவதும் உண்டு என்று கூறுகின்றனர் மீன்பிடிப்பில் ஈடுபடும் கிராம மக்கள். 

Related Tags :
Next Story