அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் கிராமத்தினர் மனு


அடிப்படை வசதி கோரி கலெக்டரிடம் கிராமத்தினர் மனு
x
தினத்தந்தி 20 March 2018 4:00 AM IST (Updated: 20 March 2018 12:21 AM IST)
t-max-icont-min-icon

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

விருதுநகர்,

விருதுநகரிலுள்ள கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் சிவஞானம் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. அப்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து ஏராளமானோர் மனு கொடுத்தனர்.

விருதுநகர் அருகிலுள்ள கூரைக்குண்டு பஞ்சாயத்தில் 6-வது வார்டு பகுதி அதனை யொட்டி உள்ள அல்லம்பட்டி சவுண்டிதெரு, காளியம்மன்கோவில்தெரு, ராமன்தெரு பகுதியில் 1000 குடும்பங்களுக்கு மேல் வசித்து வரும் நிலையில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படுவதால் மிகுந்த சிரமம் ஏற்படுவது என்றும், கழிவுநீர் ரோட்டில் பெருக்கெடுத்து ஓடும் நிலை உள்ளது என்றும் புகார் செய்த அந்த பகுதி மக்கள் தங்களுக்கு குடிநீர் வசதி செய்து தருவதுடன் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தருமாறு கோரி மனு கொடுத்தனர்.

திருச்சுழி அருகே உள்ள கீழ்கண்டமங்கலம் பஞ்சாயத்தில் உள்ள சித்தலக்குண்டு கிராம மக்கள் தங்கள் கிராமத்தில் தனிநபர் கழிப்பறை கட்டித் தர வேண்டும் என்று பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், கிராமத்தில் பிரதான சாலையில் கழிவுநீர், மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு தகுதி இல்லாத நிலையை ஏற்படுத்தி உள்ளதாகவும், இந்த சாலையை சீரமைப்பதுடன் தங்கள் கிராமத்தில் தனிநபர் கழிப்பறை கட்டத் தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் வேலை வழங்க உத்தரவிடக்கோரியும் மனு கொடுத்தனர்.

சாத்தூர் தாலுகாவில் உள்ள ஒத்தையால் கிராம மக்கள் நாட்டாண்மை கருப்பசாமி தலைமையில் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அதில் ஒத்தையால் கிராமத்தில் வடக்கு தெருவில் 350 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும் கடந்த 3 மாதங்களாக பிற பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வரும் நிலையில் தங்கள் பகுதிக்கு மட்டும் குடிநீர் வினியோகம் இல்லாத நிலை உள்ளதாகவும் எனவே புறக்கணிக்கப்படும் தங்கள் பகுதிக்கு உடனடியாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி உள்ளனர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் யூனியனில் உள்ள இடையன்குளம் கிராமத்தில் 50 குடும்பத்தினர் வசித்து வருவதாகவும், கூலி வேலை செய்து பிழைத்து வரும் அவர்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்குவதுடன் தற்போது குடியிருக்கும் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றிய ஆதிதமிழர் கட்சி செயலாளர் பொன்னுசாமி மனு கொடுத்தார். 

Next Story