இடத்தை காலி செய்யக் கூறி நோட்டீஸ்: கலெக்டர் காலில் விழுந்த பொதுமக்கள்
இடத்தை காலி செய்யக் கூறி நோட்டீஸ் வழங்கப்பட்டதால் நடவடிக்கை எடுக்கக் கோரி நார்த்தாம்பூண்டி மக்கள் கலெக்டர் காலில் விழுந்தனர்.
திருவண்ணாமலை,
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்வு நாள் கூட்டம் நடைபெற்றது. திருவண்ணாமலையை அடுத்த நார்த்தாம்பூண்டி பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் கோரிக்கை மனு அளிக்க வந்தனர். அப்போது அவர்கள் தங்களது குழந்தைகளை பள்ளி சீருடையில் அழைத்து வந்திருந்தனர்.
கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முன்பு மாற்றுத் திறனாளிகளிடம் மனுக்களை வாங்கி கொண்டு இருந்தார். நார்த்தாம்பூண்டி மக்கள் அங்கு சென்றனர்.
மாற்றுத்திறனாளிகளிடம் கலெக்டர் மனுக்களை வாங்கிவிட்டு தனது அறைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் திடீரென கலெக்டரின் காலில் விழுந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களிடம், கலெக்டர் குறைகளை கேட்டார்.
நாங்கள் நார்த்தாம்பூண்டி அண்ணாநகர் பகுதியில் வசித்து வருகிறோம். இங்கு 42 குடும்பங்களை சேர்ந்த மக்கள் உள்ளோம். கடந்த 16-ந் தேதி பொதுப்பணித்துறை சார்பில் நார்த்தாம்பூண்டி அண்ணாநகர் பகுதி நீர்நிலை புறம்போக்கு இடத்தில் உள்ளது.
அதனால் இந்த இடத்தை காலி செய்து தர வேண்டும் என்று நோட்டீஸ் வழங்கி உள்ளனர். 21 நாட்களில் காலி செய்து கொடுக்க வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர். நாங்கள் குடியிருக்கும் பகுதியில் சாலை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் எங்களிடம் மின்சாரம் கட்டணம் கட்டியதற்கான ரசீது உள்ளது. எங்களது குழந்தைகளுக்கு தேர்வுகள் நடைபெற உள்ளது. இந்த சமயத்தில் எங்களை காலி செய்ய சொன்னால் நாங்கள் என்ன செய்வோம். இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story