தேவர்சோலையில் பசு மாடுகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி


தேவர்சோலையில் பசு மாடுகளை கடித்து கொன்ற சிறுத்தைப்புலி
x
தினத்தந்தி 20 March 2018 3:30 AM IST (Updated: 20 March 2018 12:44 AM IST)
t-max-icont-min-icon

தேவர்சோலையில் சிறுத்தைப்புலி ஒன்று 2 பசு மாடுகளை கடித்து கொன்றது. இதனால் கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர். மேலும் சிறுத்தைப் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

கூடலூர்,

கூடலூர் பகுதியில் காட்டு யானைகள், புலிகள், மான்கள், காட்டெருமைகள், சிறுத்தைப்புலிகள், கரடிகள் என வனவிலங்குகள் அதிகளவு உள்ளன. பசுந்தீவன தட்டுப்பாட்டால் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விவசாய பயிர்களை தின்று சேதப்படுத்தி வருகின்றன. மேலும் இரவில் சிறுத்தைப்புலிகள் ஊருக்குள் வந்து கால்நடைகளை பிடித்து கொன்று வருகின்றன. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

கூடலூர் தாலுகா தேவர்சோலை சர்க்கார்மூலா பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் தனது வீட்டில் 5 பசு மாடுகள் வளர்த்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம் போல் பசுக்களை மேய்ச்சலுக்கு விட்டார். ஆனால் மாலை நேரத்தில் வீட்டுக்கு ஒரு பசு மட்டுமே வந்தது. இதையடுத்து மற்ற பசுக்களை விஜயன் மற்றும் அவரது குடும்பத்தினர் தேடினர். ஆனால் மாடுகள் காணாமல் போனது குறித்த தகவல் எதுவும் கிடைக்க வில்லை.

இந்த நிலையில் நேற்று காலை அதே பகுதியில் உள்ள தேயிலை தோட்டத்தில் 2 பசு மாடுகள் இறந்து கிடப்பது தெரிய வந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை அறிந்த விஜயன் மற்றும் பொதுமக்கள் நேரில் சென்று பார்த்தனர்.

அப்போது சிறுத்தைப்புலி கடித்து விஜயனின் பசு மாடுகள் இறந்தது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும் மேலும் 2 மாடுகள் எங்கு சென்றது என்பது தெரியவில்லை. இதனால் காணாமல் போன பசுக்களை தேடும் பணியில் அப்பகுதி மக்கள் ஈடுபட்டு உள்ளனர். இதற்கிடையே சம்பவ இடத்தை வன காப்பாளர் பிரகாஷ் பார்வையிட்டார்.

இது குறித்து கிராம மக்கள் கூறும்போது, இறந்து போன பசுக்களுக்கு 2 வயது இருக்கும். கிராம பகுதியில் சிறுத்தைப்புலி நடமாட்டம் இருப்பதால் அச்சமாக உள்ளது. எனவே இனி வரும் காலங்களில் கால்நடைகளை தாக்கும் செயல்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எனவே கிராம மக்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி சிறுத்தைப்புலியை கூண்டு வைத்து பிடிக்க நட வடிக்கை எடுக்க வேண்டும், என்றனர். 

Next Story