வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது


வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 20 March 2018 5:15 AM IST (Updated: 20 March 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த என்ஜினீயர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். பணத்தகராறில் நண்பரை சிக்கவைக்க அவரது போனில் இருந்து மிரட்டல் விடுத்தது அம்பலமானது.

ஆலந்தூர்,

சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் மர்ம ஆசாமி ஒருவர் போன் செய்து விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகவும் அது சிறிது நேரத்தில் வெடிக்கும் என கூறி போனை துண்டித்துவிட்டான்.

இதுபற்றிய தகவல் உடனடியாக விமான நிலைய அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது.

விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் பயணிகள் யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் சென்னை விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமிகளை பிடிக்க மாநகர போலீஸ் கமிஷனர் உத்தரவிட்டார். அதன்படி பரங்கிமலை போலீஸ் துணை கமிஷனர் முத்துசாமி தலைமையில் உதவி கமிஷனர் கோவிந்தராஜ், பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் சிவக்குமார், மடிப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர் ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டது.

தனிப்படையினர் மிரட்டல் விடுத்த செல்போன் எண்ணை வைத்து தீவிரமாக விசாரணை நடத்தியதில் ஜல்லடியன்பேட்டை புதுநகரில் வசித்த சக்திசரவணன்(வயது28) என்பவரது செல்போனில் இருந்து மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து சக்திசரவணனை போலீசார் பிடித்தனர். அப்போது அவருடன் இருந்த அவரது நண்பரான திருச்சி துறையூரை சேர்ந்த தீபுஆனந்த்(29) என்பவரையும் பிடித்தனர்.

போலீசார் பிடிக்கும் போது அவர்கள் இருவரும் அளவுக்கு அதிகமான மதுபோதையில் இருந்தனர். இதைத்தொடர்ந்து இருவரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர்.

விசாரணையில் தீபு ஆனந்த் தனியார் நிறுவனத்தில் நூலகராகவும், சக்திசரவணன் தனியார் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றி வருவதும், தீபு ஆனந்திற்கு விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி சக்திசரவணன் ரூ.25 ஆயிரம் பணம் பெற்றதாகவும் ஆனால் வேலை வாங்கி கொடுக்காமலும் பணத்தை திருப்பி தராமலும் ஏமாற்றி வந்ததும் தெரியவந்தது.

மேலும் நேற்று முன்தினம் ஜல்லடியன்பேட்டையில் சக்திசரவணன் வீட்டில் இருவரும் மதுஅருந்தினார்கள். குடிபோதையில் பணம் தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது பணம் தராத ஆத்திரத்தில் சக்திசரவணனை சிக்கவைக்க அவரது செல்போனில் இருந்து தீபுஆனந்த் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு வைத்து உள்ளதாக மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் பள்ளிக்கரணை போலீசார் கைது செய்து அவர்கள் மீது வழக்கு பதிவு செய்தனர்.

வெடிகுண்டு மிரட்டலை அவர்கள் இரவு 10 மணி அளவில் விடுத்த நிலையில் இரவு 12 மணிக்குள் அதாவது மிரட்டல் விடுத்த 2 மணி நேரத்திற்குள் போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து அவர்களை கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Next Story