கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளை புனரமைக்க கிரண்பெடி ஆலோசனை


கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளை புனரமைக்க கிரண்பெடி ஆலோசனை
x
தினத்தந்தி 20 March 2018 4:45 AM IST (Updated: 20 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

புதுவை மாநில கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளை புனரமைப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் கவர்னர் கிரண்பெடி ஆலோசனை நடத்தினார்.

புதுச்சேரி,

புதுவை மாநில கூட்டுறவு வங்கியில் கடன் வழங்குவதில் முறைகேடுகள் நடைபெறுவதாகவும், போதிய கல்வி தகுதியற்றவர்கள் உயர் பொறுப்புகளில் இருப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன. இதைத்தொடர்ந்து கவர்னர் கிரண்பெடி அங்கு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கூட்டுறவு வங்கி மூலம் கொடுக்கப்பட்ட கடன்கள், அவை யாருடைய சிபாரிசின்பேரில் வழங்கப்பட்டது? என்பது குறித்து வங்கி அதிகாரிகள், ஊழியர்களிடம் கேள்வி எழுப்பினார். இது தொடர்பாக அவர்களது பதிலை எழுத்து மூலமாகவும் பெற்றுக்கொண்டார். அதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பெயரை ஊழியர்கள் குறிப்பிட்டு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட கவர்னர் கிரண்பெடி வங்கியின் பொதுமேலாளர், மேலாண் இயக்குனர் பதவிகளுக்கு அதிகாரிகளை நியமிக்க நபார்டு வங்கி உதவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். இந்த நிலையில் கூட்டுறவு வங்கியின் செயல்பாடுகளை புனரமைப்பது தொடர்பாக கவர்னர் கிரண்பெடி கவர்னர் மாளிகையில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் கவர்னரின் செயலாளர் தேவநீதிதாஸ், கூட்டுறவுத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு, பதிவாளர் சிவக்குமார் மற்றும் ரிசர்வ் வங்கி, நபர்டு வங்கி அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்போது புதிய மேலாண் இயக்குனர், பொதுமேலாளர் ஆகியோரை நபார்டு வங்கி மூலம் நியமிப்பதே வங்கியில் பணம் சேமித்துள்ளவர்களின் பாதுகாப்புக்கு உறுதி செய்வதாக இருக்கும் என்று குறிப்பிட்டார். 

Next Story