ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது


ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன்-தம்பி உள்பட 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 20 March 2018 3:45 AM IST (Updated: 20 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

ரவுடி கொலை வழக்கில் தொடர்புடைய அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை குண்டர் சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை கீழவாசல் சாலைக்காரத் தெருவை சேர்ந்தவர் சின்னராசு. இவருடைய மகன் அப்பு என்கிற ஜெயகாந்தன்(வயது31). இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கு என 11 வழக்குகள் உள்ளன. கீழவாசல் போலீஸ் நிலையத்தில் உள்ள ரவுடிகள் பட்டியலில் இவரது பெயர் இடம் பெற்றுள்ளது. கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி இரவு ஆதிமாரியம்மன்கோவில் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் நின்று கொண்டிருந்த ஜெயகாந்தன் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

பழிக்குபழியாக நடந்த இந்த கொலை வழக்கில் தஞ்சை கீழவாசல் டவுன் கரம்பை கீழதெருவை சேர்ந்த கதிரேசன் மகன்கள் போஜா சுரேஷ் என்கிற சுரேஷ் குமார்(வயது34), முத்தமிழ்ச்செல்வன்(26), அதே பகுதியில் வசிக்கும் துரைராஜன் மகன் கலிவரதன்(44) ஆகியோர் தொடர்புடையவர்கள். இவர்கள் 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் பரிந்துரையின்பேரில் தஞ்சை தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பசுபதி வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் சமர்ப்பித்தார்.

சிறையில் அடைப்பு

இந்த ஆவணங்களை கலெக்டர் அண்ணாதுரை பரிசீலனை செய்து 3 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சுரேஷ்குமார், முத்தமிழ்ச்செல்வன், கலிவரதன் ஆகிய 3 பேரையும் வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் மற்றும் போலீசார் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். 

Next Story