காங்கிரஸ் பிரமுகர் கொலையில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை


காங்கிரஸ் பிரமுகர் கொலையில் முக்கிய குற்றவாளியை காவலில் எடுத்து போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 20 March 2018 5:00 AM IST (Updated: 20 March 2018 1:52 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காங்கிரஸ் பிரமுகர் கொலையில் முக்கிய குற்றவாளியான மூர்த்தியை கோர்ட்டு அனுமதியுடன் 2 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

புதுச்சேரி,

புதுவை வைத்திக்குப்பத்தை சேர்ந்த காங்கிரஸ் பிரமுகரான ஆம்புலன்ஸ் உரிமையாளர் மாறன் சம்பவத்தன்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பெரியகடை போலீசார் அதே பகுதியை சேர்ந்த மூர்த்தி, அவரது மனைவி திலகா உள்பட பலர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி சிலரை கைது செய்தனர்.

முக்கிய குற்றவாளியான மூர்த்தியை தேடி வந்தநிலையில் அவர் கடந்த 14-ந் தேதி பண்ருட்டி கோர்ட்டில் சரணடைந்தார். மேலும் சிலரும் கோர்ட்டில் சரணடைந் தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மொத்தம் 11 பேர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட் டுள்ளனர்.

மாறன் கொலை வழக்கு தொடர்பாக மூர்த்தியின் மனைவி திலகா, வினோத் மற்றும் கன்னுக்கட்டி கணேஷ் என்பவரை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர். இவர்கள் 3 பேரும் போலீஸ் பிடியில் சிக்காமல் கோர்ட்டில் சரணடைய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. கோர்ட்டில் சரண் அடையும் முன்பு அவர்களை கைது செய்வதற்காக புதுச்சேரி, கடலூர், விழுப்புரம் மாவட்ட கோர்ட்டுகளில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள்.

இதற்கிடையே மாறன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் மூர்த்தியை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க பெரியகடை போலீசார் புதுச்சேரி 2-வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதனை ஏற்று மூர்த்தியை 2 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க போலீசுக்கு அனுமதி வழங்கி நீதிபதி தனலட்சுமி உத்தரவிட்டார். இதையடுத்து மூர்த்தியை காவலில் எடுத்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story