மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 லட்சம் கடன் உதவி அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்


மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.22.54 லட்சம் கடன் உதவி அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்
x
தினத்தந்தி 20 March 2018 4:15 AM IST (Updated: 20 March 2018 2:23 AM IST)
t-max-icont-min-icon

கெரகோடஅள்ளியில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.22.54 லட்சம் கடன் உதவிகளை அமைச்சர் கே.பி.அன்பழகன் வழங்கினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் புதிய பகுதிநேர ரேஷன்கடைகள் திறப்பு விழா, சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தொகுப்பு வீடுகள் பழுது நீக்குவதற்கான ஆணை வழங்கும் விழா மற்றும் கெரகோடஅள்ளியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் விழா நடைபெற்றது. இந்த விழாக்களுக்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். உதவி கலெக்டர் ராமமூர்த்தி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த விழாவில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு 2 புதிய பகுதி நேர ரேஷன்கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்கினார். இதைத்தொடர்ந்து தொகுப்பு வீடுகள் பழுதுநீக்கம் செய்கிற 59 பயனாளிகளுக்கு ரூ.22 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான ஆணைகளையும், கெரகோடஅள்ளியை சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் 46 பேருக்கு ரூ. 22 லட்சத்து 54 ஆயிரம் கடன் உதவியையும் அவர் வழங்கினார்.

இந்த விழாவில் அமைச்சர் கே.பி.அன்பழகன் பேசுகையில், தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மூலம் 2017-2018-ம் ஆண்டில் ரூ.124 கோடி பயிர்க்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த இலக்கை தாண்டி இதுவரை தர்மபுரி மாவட்டத்தில் 30 ஆயிரத்து 5 விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.145 கோடியே 5 லட்சம் வழங்கி சாதனை படைத்து உள்ளோம். இதேபோன்று மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.16 கோடியே 85 லட்சம் கடன் உதவி வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 2636 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 76 லட்சம் கடன் உதவி வழங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

இந்த விழாவில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாணிக்கம், கூட்டுறவு சங்க தலைவர்கள் காவேரி, கோவிந்தசாமி, சம்பத், செந்தில்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், தாசில்தார் ரேவதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கட்ரமணன், வடிவேலன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கூட்டுறவு துணை பதிவாளர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார். 

Next Story