ராமராஜ்ய ரதம் இன்று புளியரை வழியாக தமிழகம் வருகை நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு
ராமராஜ்ய ரதம் இன்று புளியரை வழியாக தமிழகம் வருகிறது. இதையொட்டி பதற்றம் ஏற்பட்டுள்ளதால் நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நெல்லை,
விசுவ இந்து பரிஷத் அமைப்பின் ஆதரவு அமைப்பு சார்பில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி உத்தரபிரதேச மாநிலத்தில் இருந்து ராமராஜ்ய ரத யாத்திரை தொடங்கியது. இந்த ரத யாத்திரை பல்வேறு மாநிலங்களை கடந்து கேரளா மாநிலத்தில் இருந்து நெல்லை மாவட்ட எல்லையான புளியரை வழியாக தமிழகம் வருகிறது.
இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள், அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த ரத யாத்திரைக்கு எதிராக நெல்லை மாவட்ட கலெக்டரிடமும் மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று புளியரையில் அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவானது. எனவே மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேரடி மேற்பார்வையில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
செங்கோட்டையில் இருந்து புளியரை சோதனை சாவடி வரை இருபுறமும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் வாகனங்கள், கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் என அனைத்தும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. இதனால் செங்கோட்டையில் பதற்றமும், பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே செங்கோட்டை போலீஸ் நிலையத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நேற்று இரவு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது:-
ராமராஜ்ய ரத யாத்திரை கேரள மாநிலத்தில் இருந்து நாளை (அதாவது இன்று) கோட்டை வாசல் கருப்பசாமி கோவில் வழியாக தமிழக எல்லையான புளியரை பகுதிக்கு வருகிறது. தமிழகத்திற்கு ரத யாத்திரை வரக்கூடாது என்று பல்வேறு கட்சியினர் மாவட்ட நிர்வாகத்திடம் மனுகொடுத்துள்ளனர். ரத யாத்திரை வந்தால் ரதம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் தெரிவித்து உள்ளனர்.
இந்த சம்பவங்களை தொடர்ந்து செங்கோட்டை பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால் முன்எச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கையாக 1000-க்கும் மேற்பட்ட போலீசார் செங்கோட்டை பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் உள்ள 32 சோதனை சாவடிகளிலும் அதிகமான போலீசார் பாதுகாப்புக்கு போடப்பட்டு உள்ளனர். அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் இருக்க 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டு உள்ளது. இதன்படி வெளி மாவட்டங்களில் உள்ளவர்கள் யாரும் அவசியமில்லாமல் நெல்லை மாவட்டத்துக்குள் வரக்கூடாது. ஒரு சிலருக்கு மேல் கூட்டமாக கூடக்கூடாது. அவ்வாறு கூட்டமாக வந்தால் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவார்கள். மேலும் ராமராஜ்ய ரத யாத்திரைக்கு தடை கிடையாது.
முன்னதாக ராம ராஜ்ய ரத யாத்திரை நெல்லை மாவட்டத்திற்குள் வரும் போது சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும். எனவே நெல்லை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கவேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையை ஏற்று கலெக்டர் சந்தீப் நந்தூரி நேற்று இரவு ஒரு உத்தரவு பிறப்பித்தார். அந்த உத்தரவில், நேற்று (19-ந் தேதி) மாலை 6 மணி முதல் வருகிற 23-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணி வரை நெல்லை மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவு அமலில் உள்ளதால் மக்கள் கூட்டமாகவோ, ஊர்வலமாகவோ செல்ல மாவட்டத்தில் அனுமதி கிடையாது. வெளி மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தும் நோக்கத்தில் வரவோ, வாகனங்களில் நுழையவோ தடை விதிக்கப்படுகிறது. இந்த தடை உத்தரவை யாராவது மீறினால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story