ம.நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சசிகலா தஞ்சை வந்தார்


ம.நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சசிகலா தஞ்சை வந்தார்
x
தினத்தந்தி 21 March 2018 4:45 AM IST (Updated: 20 March 2018 11:11 PM IST)
t-max-icont-min-icon

ம.நடராஜன் இறுதிச்சடங்கில் பங்கேற்க பெங்களூரு சிறையில் இருந்து பரோலில் சசிகலா தஞ்சை வந்தார். அவர் கணவர் உடலை பார்த்து கதறி அழுதார்.

தஞ்சாவூர்,

சசிகலாவின் கணவரும், புதிய பார்வை ஆசிரியருமான ம.நடராஜன் நேற்று அதிகாலை மரணம் அடைந்தார். அவருடைய உடல் பதப்படுத்தப்பட்டு பெசன்ட் நகரில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இதையடுத்து அவருடைய உடல் அங்கிருந்து நேற்று மதியம் ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சைக்கு கொண்டு வரப்பட்டது. தஞ்சை அருளானந்த நகரில் உள்ள அவருடைய வீட்டுக்கு இரவு 7.10 மணிக்கு வந்து சேர்ந்தது. அங்கு அவரது உடல் வைக்கப்பட்டது.


இந்த நிலையில் ம.நடராஜன் இறந்த தகவல் பெங்களூரு சிறையில் இருந்த சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் பரோல் கேட்டு விண்ணப்பித்தார். சிறை நிர்வாகம் சார்பில் சசிகலாவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கப்பட்டது.

இதையடுத்து பெங்களூரு சிறையில் மருத்துவ பரிசோதனைகள் முடிந்து நேற்று மதியம் 1.30 மணி அளவில் சசிகலா பெங்களூரு சிறையில் இருந்து கார் மூலம் தஞ்சைக்கு புறப்பட்டார். இரவு 6.20 மணி அளவில் திருச்சி துவாக்குடி சோதனை சாவடி அருகில் வந்து நடராஜனின் உடல் ஏற்றி வந்த ஆம்புலன்சுக்காக காத்து இருந்தார். ஆம்புலன்சு வந்ததும் அதன் பின்னால் காரில் தஞ்சைக்கு வந்தார். அவருடன் டி.டி.வி. தினகரனும் உடன் வந்தார்.


காரில் இருந்து இறங்கிய சசிகலா அங்கு வைக்கப்பட்டு இருந்த கணவர் ம.நடராஜனின் உடலைப்பார்த்து கதறி அழுதார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். தொடர்ந்து ம.நடராஜன் உடலுக்கு முக்கிய பிரமுகர்கள், அரசியல் கட்சியினர், உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.

இன்று(புதன்கிழமை) காலை ம.நடராஜன் உடல் ஊர்வலமாக அருளானந்த நகரில் இருந்து விளாருக்கு ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு விளாரில் உள்ள அவருடைய பூர்வீக வீட்டிற்கு கொண்டு செல்லப்படுகிறது. அங்கு இறுதிச்சடங்குகள் நடக்கிறது. இதிலும் சசிகலா கலந்து கொள்கிறார். பின்னர் மாலையில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.

Next Story