குஜராத் மாநிலத்துடன் போட்டியிட தூத்துக்குடி உப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும் உப்புத்துறை துணை ஆணையர் ரகு பேட்டி


குஜராத் மாநிலத்துடன் போட்டியிட தூத்துக்குடி உப்பின் தரத்தை மேம்படுத்த வேண்டும் உப்புத்துறை துணை ஆணையர் ரகு பேட்டி
x
தினத்தந்தி 21 March 2018 2:30 AM IST (Updated: 20 March 2018 11:56 PM IST)
t-max-icont-min-icon

குஜராத் உப்புடன் போட்டியிட, தூத்துக்குடி உப்பின் தரத்தை மேம்படுத்த உற்பத்தியாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று சென்னை மண்டல உப்புத்துறை துணை ஆணையர் ரகு தெரிவித்தார்.

தூத்துக்குடி,

குஜராத் உப்புடன் போட்டியிட, தூத்துக்குடி உப்பின் தரத்தை மேம்படுத்த உற்பத்தியாளர்கள் முயற்சி எடுக்க வேண்டும் என்று சென்னை மண்டல உப்புத்துறை துணை ஆணையர் ரகு தெரிவித்தார்.

மருத்துவ முகாம்

மத்திய அரசின் உப்புத்துறை சார்பில் தூத்துக்குடி அலுவலக வளாகத்தில் உப்பள தொழிலாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் கண் பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமுக்கு சென்னை மண்டல உப்புத்துறை துணை ஆணையர் ரகு தலைமை தாங்கினார். தூத்துக்குடி உப்புத்துறை கண்காணிப்பாளர் கஸ்தூரி வரவேற்று பேசினார். தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க செயலாளர் தனபாலன், சிறு குத்தகை உப்பு உற்பத்தியாளர் சங்க செயலாளர் வேல்மணி ஆகியோர் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகள் சங்க தலைவர் பிரகாஷ் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் அரசு ஆஸ்பத்திரி டாக்டர்கள் வினோத் ராம்குமார், பாலசவுந்தர், மாரீசுவரி, தங்கம் ஆகியோர் கலந்து கொண்டு மருத்துவ பரிசோதனை செய்தனர். முகாமில் 100-க்கும் மேற்பட்ட உப்பளத் தொழிலாளர்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்தனர். உப்புத்துறை துணை கண்காணிப்பாளர் பிரகாஷ் நன்றி கூறினார்.

உப்பு ஏற்றுமதி

பின்னர் சென்னை மண்டல உப்புத்துறை துணை ஆணையர் ரகு கூறியதாவது:-

தூத்துக்குடியில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு சராசரியாக ஆண்டுக்கு 3 லட்சம் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டது. இந்த ஏற்றுமதி படிப்படியாக குறைந்து உள்ளது. கடந்த நிதியாண்டில் 56 ஆயிரம் டன் மட்டுமே ஏற்றுமதி செய்யப்பட்டு இருந்தது.

நடப்பு நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை 1 லட்சத்து 7 ஆயிரத்து 500 டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. முதல் முறையாக தாய்லாந்து நாட்டுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. அங்கு சுமார் 20 ஆயிரம் டன் உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. மலேசியாவுக்கு 30 ஆயிரம் டன்னும், கொரியாவுக்கு 33 ஆயிரம் டன் உப்பும் ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது. இதே போன்று பல்வேறு நாடுகளுக்கு உப்பு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது.

குத்தகை கொள்கையில் மாற்றம்

தமிழ்நாடு முழுவதும் உப்புத்துறைக்கு சொந்தமான சுமார் 18 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் உப்பு உற்பத்தியாளர்களுக்கு குத்தகைக்கு விடப்பட்டு உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் ஆண்டுக்கு சராசரியாக 21 லட்சம் டன் உப்பு உற்பத்தி நடக்கிறது. தூத்துக்குடி கோட்டத்தில் மட்டும் 19 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. தூத்துக்குடியில் 11 லட்சம் வரை உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. சிறிய அளவிலான உப்பு உற்பத்தி தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகம் உள்ளது.

உப்புத்துறை நிலங்கள் உப்பளங்கள் அமைப்பற்கு 20 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குத்தகை கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது. அதன்படி திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலமே நிலங்களை வழங்க முடிவு செய்யப்பட்டது. ஆனால் இதனை எதிர்த்து உப்பள உரிமையாளர்கள் கோர்ட்டில் தடையாணை பெற்று உள்ளதால், இதுவரை அந்த கொள்கை நடைமுறைக்கு வரவில்லை.

தரத்தை மேம்படுத்த வேண்டும்

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் மத்திய அரசு சார்பில் அறிவியல் ரீதியாக உப்பு தயாரிக்கும் மாதிரி உப்பளம் அமைக்கப்பட்டு உள்ளது. தூத்துக்குடி உப்பு உற்பத்தியாளர்கள், குஜராத் உற்பத்தியாளர்களுடன் போட்டி போட தரத்தை மேம்படுத்துவது அவசியம். இங்கு உள்ள உப்பு உற்பத்தியாளர்கள் நவீன எந்திரமயமாக்கலுக்கு மாற வேண்டியது காலத்தின் கட்டாயம். இங்கு சிறிய அளவிலான உப்பு உற்பத்தியாளர் களே அதிகம் என்பதால், சிலர் ஒன்றாக இணைந்து எந்திரமயமாக்கலுக்கு மாறலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story