வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் வருகை குறைவு, ராமேசுவரம் ரத வீதிகள் வெறிச்சோடின


வெயிலின் தாக்கத்தால் பக்தர்கள் வருகை குறைவு, ராமேசுவரம் ரத வீதிகள் வெறிச்சோடின
x
தினத்தந்தி 21 March 2018 2:45 AM IST (Updated: 21 March 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

வெயிலின் தாக்கத்தால் ராமேசுவரம் கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைந்து விட்டது. இதனால் கோவிலை சுற்றி உள்ள ரத வீதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. மேலும் ரதவீதிகளில் பந்தல்கள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ராமேசுவரம்,

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக கருதப்படும் ராமேசுவரம் கோவிலுக்கு தினமும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் கோவிலின் ரத வீதிகளில் அரசு பேருந்துகள் உள்ளிட்ட எந்தவொரு சுற்றுலா வாகனங்களுக்கும் அனுமதி இல்லாததால், கோவிலுக்கு வரும் பக்தர்கள் ரத வீதிகள் வழியாக நடந்து கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.

எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு வழக்கத்தை விட மார்ச் மாத தொடக்கத்திலேயே கோடை வெயிலின் தாக்கம் அதிக அளவு இருந்து வருகிறது. மேலும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில் 10, 11, 12-வது வகுப்புகளுக்கு அரசு பொது தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் ராமேசுவரம் கோவிலுக்கு வரும்பக்தர்களின் கூட்டம் கடந்த 1 வாரத்திற்கும் மேலாக குறைந்துவிட்டது.

இதனால் கோவிலின் 4 ரத வீதிகளிலும் பக்தர்கள், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி போய் காணப்படுகிறது. மேலும் அக்னி நட்சத்திரத்தை மிஞ்சும் வகையில் ராமேசுவரம் பகுதியில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் இருந்து வருவதால், கோவிலின் ரத வீதிகளின் சாலையில் பக்தர்கள் வெயிலால் அவதியடைந்து வருகின்றனர். அவர்களில் குழந்தைகள் வயதானவர்கள் மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட அனைவரும் மிகுந்த சிரமமடைந்து வருகின்றனர்.

கோடை வெயிலின் தாக்கம் இன்னும் 4 மாதத்திற்கும் மேலாக இருக்கும் என்பதால் கோவிலின் 4 ரத வீதிகள், அக்னி தீர்த்த கடற்கரை செல்லும் சன்னதி தெரு, அக்னி தீர்த்த கடற்கரை சாலை பகுதிகளில் பக்தர்கள் நின்று ஓய்வு எடுத்து செல்ல வசதியாக பந்தல் அமைக்க திருக்கோவில் நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story