ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாலைமறியல்


ராமராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாலைமறியல்
x
தினத்தந்தி 21 March 2018 4:00 AM IST (Updated: 21 March 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து காரைக்காலில் சாலைமறியலில் ஈடுபட்ட தி.மு.க., மனித நேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த 132 பேர் கைது செய்யப்பட்டனர்.

காரைக்கால்,

ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க.வினர் கைது செய்யப்பட்டனர். இதை கண்டித்தும், ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமிழகம் மற்றும் புதுவையில் தி.மு.க., விடுதலை சிறுத்தைகள் உள்பட பல்வேறு அரசியல் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காரைக்காலில் பாரதியார் சாலை - திருநள்ளாறு சாலை சந்திப்பில் முன்னாள் அமைச்சர் நாஜிம் தலைமையில் தி.மு.க.வினர் நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்த காரைக்கால் நகர போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்துபோகுமாறு கூறினர். ஆனால் தி.மு.க.வினர் தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட இலக்கிய அணி அமைப்பாளர் அமுதா ஆறுமுகம், இளைஞர் அணி அமைப்பாளர் முகமது ரிபாஷ், நிர்வாகிகள் ஆசைத்தம்பி, சங்கர், காசிநாதன் உள்ளிட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.

விடுதலை சிறுத்தைகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியினர் காரைக்கால் புதிய பஸ்நிலையம் அருகே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரஹீம், த.மு.மு.க. மாவட்ட தலைவர் கமால் உசேன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் அரசு வணங்காமுடி, செந்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 42 பேரை காரைக்கால் நகர போலீசார் கைது செய்தனர்.

காரைக்காலில் கைது செய்யப்பட்ட தி.மு.க.வினர் உள்பட 132 பேரும் மாலையில் விடுவிக்கப்பட்டனர். 

Next Story