நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை 15 கிராம மக்கள் முற்றுகை


நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு: கலெக்டர் அலுவலகத்தை 15 கிராம மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 21 March 2018 3:45 AM IST (Updated: 21 March 2018 3:18 AM IST)
t-max-icont-min-icon

நான்கு வழிச்சாலைக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து கலெக்டர் அலுவலகத்தை 15 கிராம மக்கள் முற்றுகையிட்டனர். மேலும் முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் மனு கொடுத்தனர்.

திண்டுக்கல்,

திண்டுக்கல்லில் இருந்து பழனி வழியாக பொள்ளாச்சி வரையுள்ள தேசிய நெடுஞ்சாலையில் வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதனால் அந்த தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்பட இருக்கிறது. இதற்காக விரைவில் நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற இருக்கிறது.

இதையொட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் திண்டுக்கல்-பழனி சாலையில் சில பகுதிகளில் நின்ற புளியமரங்கள் வெட்டப்பட்டன. இதற்கிடையே நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு விவசாய நிலங்கள், வீட்டு மனைகள், வீடுகள், கட்டிடங்களும் கையகப்படுத்தப்பட இருக்கிறது. இதனால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் திண்டுக்கல்-பழனி சாலையில் உள்ள முத்தனம்பட்டி, பாலம்ராஜக்காபட்டி, இடையபட்டி, கதிரையன்குளம், ரெட்டியார்சத்திரம், பலக்கனூத்து, புதுச்சத்திரம் உள்பட 15 கிராமங்களை சேர்ந்த மக்கள், நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் நேற்று ரெட்டியார்சத்திரம் பகுதியில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில், முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி மற்றும் 15 கிராம மக்கள் நேற்று கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர். பின்னர் நிலம் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, நான்குவழிச்சாலை நிலம் எடுப்பு தனி மாவட்ட வருவாய் அலுவலர் லதா ஆகியோரை சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் இ.பெரியசாமி கூறுகையில், திண்டுக்கல்-பொள்ளாச்சி இடையே நான்கு வழிச்சாலை அமைக்க நிலம் எடுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆத்தூர் தொகுதியில் உள்ள 15 கிராமங்களில் நிலம் எடுக்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதனால் குடியிருப்பு பகுதிகள், வியாபார நிறுவனங்களை இழந்து மக்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்காத வகையில் சாலை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளோம், என்றார். 

Next Story