ஓமலூர் அருகே காரில் வந்து ஆடு திருடிய கும்பலில் ஒருவர் பிடிபட்டார்
ஓமலூர் அருகே ஆடு திருடி விட்டு தப்பி ஓட முயன்ற கும்பலில் ஒருவர் பிடிபட்டார். கார் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர் திருட்டை தடுக்கக்கோரி போலீஸ் நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஓமலூர்,
ஓமலூரை அடுத்த தொளசம்பட்டி ராமகிருஷ்ணனூர் பகுதியைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (வயது 55). இவர் 10-க்கும் மேற்பட்ட செம்மறி ஆடுகளை வளர்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் நள்ளிரவு பழனியம்மாள் வீட்டின் அருகே நாய் குரைக்கும் சத்தம் கேட்டது. உடனே அவர் வெளியே வந்து பார்த்தபோது காரில் வந்த ஒரு கும்பல் பழனியம்மாளின் 2 ஆடுகளை திருடி காரில் தூக்கிப்போட்டுக்கொண்டு செல்ல முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சத்தம் போட்டார். இதை கேட்டதும் அக்கம்பக்கத்தினர் அங்கு திரண்டு வந்தனர். அதற்குள் அந்த கும்பல் அங்கிருந்து காரை ஓட்டிக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் பொதுமக்கள் விரட்டிச்சென்றனர். அப்போது அரசு மருத்துவமனை அருகில் சென்றபோது கார் பழுதடைந்தது. இதனால் அந்த காரை அங்கேயே நிறுத்தினர். பின்னர் அருகில் தயாராக நிறுத்தி இருந்த மற்றொரு காரில் 2 ஆடுகளை தூக்கிப்போட்டுக்கொண்டு புறப்பட்டனர். ஆனால் பழுதடைந்த காரில் இருந்த ஒருவர் மட்டும் பிடிபட்டார். மற்றவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர்.
உடனே அவரை பொதுமக்கள் பிடித்து தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். விசாரணையில், பிடிபட்டவர் பெயர் ஹரிகரன் என்றும், ஏற்காட்டைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதன்பின்னர் நேற்று மதியம் அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 100 பேர் திரண்டு வந்து தொளசம்பட்டி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, தொளசம்பட்டி பகுதியில் தொடர்ந்து ஆடுகள் திருட்டு போகிறது. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபற்றி பலமுறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்து உள்ளோம். அதன்பின்னரும் ஆடுகள் திருட்டு போகிறது. தொளசம்பட்டி, பெரியேரிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை சுமார் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் திருட்டு போய் உள்ளது. எனவே காரில் வந்து ஆடு திருடும் கும்பல் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆடு திருடர்களை கைது செய்ய வேண்டும், என்றனர். பொதுமக்களில் சுமார் 30 பேர், ஆடு திருட்டு குறித்து நேற்று தொளசம்பட்டி போலீசில் புகார் செய்தனர்.
திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறியதையடுத்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story