மடத்துக்குளம் அருகே வீடுகள் மீது தொடர்ந்து விழும் கற்களால் பொதுமக்கள் அச்சம்


மடத்துக்குளம் அருகே வீடுகள் மீது தொடர்ந்து விழும் கற்களால் பொதுமக்கள் அச்சம்
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 12:19 AM IST)
t-max-icont-min-icon

மடத்துக்குளம் அருகே வீடுகள் மீது தொடர்ந்து விழும் கற்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கற்களை வீசும் மர்ம ஆசாமிகளை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

மடத்துக்குளம், 

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே நரசிங்காபுரம் ஓடைத்தெருவில் ஏராளமான வீடுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வீடுகள் மீது கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக இரவு நேரத்தில் கற்கள் வந்து விழுகிறது. கற்கள் வீட்டின் சிமெண்டு கூரையை உடைத்துக்கொண்டு வீட்டுக்குள் விழுந்ததில் வீரக்குமார்(வயது 35) என்பவரும், அவருடைய மகளும் காயம் அடைந்தனர்.

இதனால் பயந்துபோன அந்த பகுதி பொதுமக்கள், தங்கள் வீடுகளில் தங்குவதற்கு அச்சமாக இருப்பதாக கூறி, கடந்த 19-ந்தேதி இரவு போலீஸ் நிலைத்தை முற்றுகையிட்டனர். அப்போது, போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து அனுப்பிவைத்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் மீண்டும் அந்த பகுதியில் உள்ள வீடுகள் மீது கற்கள் விழத்தொடங்கியது. இந்த முறை விழுந்த கற்களின் அளவும் பெரிதாக இருந்ததால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். வீட்டுக்குள் தூங்குவதற்கு அச்சமடைந்த பொதுமக்கள் கட்டிலுக்கு கீழே குழந்தைகளை படுக்க வைத்துவிட்டு, சுவரோரங்களில் இரவு முழுவதும் தூங்க முடியாமல் உட்கார்ந்து இருந்துள்ளனர்

ராஜாராமன் என்பவரின் வீட்டின் ஓட்டை உடைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு கட்டிலின் மீது கற்கள் விழுந்துள்ளது. அந்த கற்களின் அளவு பெரிதாக உள்ளது. அந்த நேரத்தில் கட்டிலில் யாரும் படுக்காததால் அவர்கள் தப்பித்தார்கள்.

மேலும் இப்பகுதி இளைஞர் கள் பல குழுக்களாக பிரிந்து இரவு முழுவதும் ரோந்து சுற்றி வருகிறார்கள். ஆனாலும் கற்கள் வீட்டின் மீது விழுவது மர்மமாகவே உள்ளது.

பழைய காலங்களில் கவண் என்ற ஆயுதத்தில் பெரிய கற்களை வைத்து எதிரிகளின் மீது வீசுவதாக சொல்வார்கள். அதுபோன்ற முறையில் தான் நீண்ட தொலைவு வீசமுடியும். அல்லது பில்லி, சூனியம் வைக்கும் மந்திரவாதிகள் குட்டிச்சாத்தானை ஏவி இதுபோன்ற செய்யும் செயலா? என்றும் தெரியவில்லை. இந்த பகுதியில் தற்காலிகமாக கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி கண்காணிக்க வேண்டும். இந்த பிரச்சினைக்கு தீர்வு காண மாவட்ட நிர்வாகம் உத்தரவிடவேண்டும்.

இவ்வாறு அந்த பகுதி பொதுமக்கள் கூறினார்கள்.

Next Story