சாணார்பட்டி அருகே குடிநீருக்காக கிணற்றை சீரமைக்கும் கிராம மக்கள்
சாணார்பட்டி அருகே குடிநீருக்காக கிணற்றை கிராம மக்கள் சீரமைத்து வருகின்றனர்.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றியம் அஞ்சுகுளிப்பட்டி கிராமத்தில் சுமார் 5 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு, ஆழ்துளை கிணறுகள் அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது. கடும் வறட்சி காரணமாக ஆழ்துளை கிணறுகள் வறண்டு விட்டன. இதன் காரணமாக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு தலைவிரித்தாடியது. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க முன்வரவில்லை.
இந்தநிலையில் அஞ்சுகுளிப்பட்டி கிராம மக்கள் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது, கிராம பொதுநிதியில் இருந்து ஆழ்துளை கிணறுகள் அமைக்க முடிவு எடுத்தனர். அதன்படி கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ரூ.2 லட்சம் செலவில் 2 ஆழ்துளை கிணறுகளை கிராம மக்கள் அமைத்தனர்.
ஆழ்துளை கிணறுகள் மூலம் கிடைக்கிற தண்ணீரை, அஞ்சுகுளிப்பட்டி கிராம மந்தையில் உள்ள கிணற்றில் சேகரித்து வைக்க முடிவு செய்தனர். அந்த கிணறு கடந்த 1989-ல் அமைக்கப்பட்டதாகும். 60 அடி ஆழம் கொண்ட கிணறு, கருங்கற்களால் கட்டப்பட்டது. தண்ணீர் இன்றி பயன்பாடு இல்லாமல் உள்ள அந்த கிணற்றை சீரமைக்கும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டுள்ளனர். இதற்காக, ரூ.1 லட்சம் வரை செலவழிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி கிணற்றின் அடிப்பாகம் மற்றும் சுற்று சுவர்களை சிமெண்டால் பூசுவது என்று முடிவு செய்யப்பட்டது. இதனையடுத்து 60 அடிக்கு மூங்கில்களால் சாரம் அமைத்து ஆண்களும், பெண்களும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த பணி நிறைவடையும் பட்சத்தில், சுமார் ஒரு லட்சம் கொள்ளளவு கொண்ட தரைமட்ட தொட்டி தயார் ஆகி விடும். மேலும் கிணற்றில் மாசு ஏற்படாமல் இருப்பதற்கு, இரும்பிலான மேற்கூரை கொண்டு மூடப்பட உள்ளது. அதன்பிறகு 2 ஆழ்துளை கிணறுகளில் இருந்து தினமும் தண்ணீர் சேகரிக்கப்பட்டு மின்மோட்டார் மூலம் தெருக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் பணி தொடங்கும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அந்த கிராம மக்கள் கூறும்போது, நாங்கள் மேற்கொள்ளும் பணியை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆழ்துளை கிணறுகளுக்கு மின்மோட்டார் அமைக்கவும், குழாய்கள் பதிக்கவும் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.
Related Tags :
Next Story