சேலம் சுகவனேசுவரர் கோவில் ராஜேஸ்வரி யானை குணமடைய வேண்டி சிறப்பு யாகம்


சேலம் சுகவனேசுவரர் கோவில் ராஜேஸ்வரி யானை குணமடைய வேண்டி சிறப்பு யாகம்
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

சேலம் சுகவனேசுவரர் கோவில் ராஜேஸ்வரி யானை குணமடைய வேண்டி கோவில்களில் சிறப்பு யாகம் நடத்தப்பட்டது.

சேலம், 

சேலம் சுகவனேசுவரர் கோவிலுக்கு சொந்தமான ராஜேஸ்வரி என்ற யானை கால்வாத நோயால் அவதிப்பட்டு வருகிறது. கோரிமேடு பகுதியில் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் வைத்து யானைக்கு நாமக்கல் கால்நடை மருத்துவ குழுவினர் மூலம் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் லோகநாதன், கோவை வன டாக்டர் மனோகரன் ஆகியோர் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.

இருப்பினும், யானைக்கு 2கால்களும் பாதிக்கப்பட்டுள்ளதால் படுத்த படுக்கையாகவே உள்ளது. சமீபத்தில் சிகிச்சை அளிக்க ஏதுவாக யானையை பொக்லைன் எந்திரம் மூலம் திருப்பியபோது, ஒரு தந்தம் உடைந்துவிட்டது. தினமும் யானைக்கு 20 முதல் 30 பாட்டில் குளுக்கோஸ், கால்சியம் உள்ளிட்ட மருந்துகளை டாக்டர்கள் அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில், உடல் நலக்குறைவால் அவதிப்படும் ராஜேஸ்வரி யானை விரைவில் குணமடைய வேண்டி சேலம் சுகவனேசுவரர் கோவில் மற்றும் டவுன் ராஜகணபதி கோவிலில் நேற்று காலை சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. சுமார் 1 மணி நேரம் நடந்த இந்த சிறப்பு யாகத்தில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கோவில் யானை விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்தனர்.

இதையடுத்து சுகவனேசுவரர் கோவில், ராஜகணபதி கோவிலில் யாகத்தில் வைக்கப்பட்டிருந்த புனிதநீர் மற்றும் பிரசாதம் ஆகியவை நேற்று மதியம் யானை சிகிச்சை பெறும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், படுத்திருந்த ராஜேஸ்வரி யானை மீது அந்த புனிதநீர் தெளிக்கப்பட்டது. மேலும், யானைக்கு சிறப்பு பூஜை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது.

தற்போது யானைக்கு சிகிச்சை அளித்து வரும் சேலம் மண்டல கால்நடைத்துறை இணை இயக்குனர் லோகநாதன் கூறியதாவது:-

சுகவனேசுவரர் கோவில் யானைக்கு 2 கால்கள் பாதிக்கப்பட்டுள்ளதால் எழுந்து நிற்கமுடியவில்லை. 24 மணி நேரமும் யானைக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பழங்கள் மற்றும் சத்தான உணவுகள் யானைக்கு வழங்குகிறோம்.

நாமக்கல் மற்றும் சென்னையில் உள்ள கால்நடைத்துறை டாக்டர்கள் கூறிய அறிவுரைப்படி மருந்துகள் வழங்கப்படுகிறது. உடல்நலம் பாதித்துள்ள கோவில் யானை விரைவில் குணமடைவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நடந்து வருகிறது.

இந்த நிலையில் அல்லிக்குட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாகிருஷ்ணன் என்பவர் அழகாபுரம் போலீசில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள யானையை பொக்லைன் எந்திரம் மூலம் தூக்கியுள்ளனர். அப்போது, யானையின் ஒரு தந்தம் உடைந்துள்ளது. மேலும், உடலில் பல இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் பொக்லைன் எந்திரத்தின் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.

Next Story