வன வளங்களை முழுமையாக பாதுகாத்திட வன ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்


வன வளங்களை முழுமையாக பாதுகாத்திட வன ஊழியர் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 March 2018 2:41 AM IST (Updated: 22 March 2018 2:41 AM IST)
t-max-icont-min-icon

வன வளங்களை முழுமையாக பாதுகாத்திடும் வகையில் வனத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு உள்ளது.

பேரையூர்,

பேரையூர் அருகே உள்ளது சாப்டூர் வனச்சரகம். இந்த வனச்சரகம் தேனி மாவட்டம் உப்புத்துறையில் இருந்து விருதுநகர் மாவட்டம் தாணிப்பாறை வரை சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் பரந்து விரிந்து உள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்து உள்ள இந்த வனப் பகுதிக்குள் சாம்பல் நிற அணில்கள், யானை, புலி, சிறுத்தை, கரடி, மான், காட்டு எருமை, செந்நாய் உள்ளிட்ட விலங்குகளும், அரிய வகை மூலிகைகள், அரிய வகை தாவரங்கள், பல்வேறு வகையான மரங்களும் உள்ளன. உலகின் தட்ப வெப்பத்தை நிர்ணயிக்கும் காரணிகளில் ஒன்றாக இந்த மேற்கு தொடர்ச்சி மலைகள் விளங்குகின்றன. ஆனால் இந்த வனப்பகுதியை பாதுகாக்கத் தான் போதிய அளவில் வனக் காவலர்கள் இல்லை என்பது வேதனை தருவதாக உள்ளது. சாப்டூர் வனச் சரகத்தில் ஆங்கிலேயர் காலத்தில் நிர்ணயிக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை தான் இன்றும் உள்ளது.

அதிகாரிகள் முதல் காவலர் வரை 21 பணியாளர்கள் இந்த சரகத்தில் இருக்க வேண்டும். ஆனால் தற்போது 11 பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இவர்களுக்கு உதவியாக வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளனர். இவர்களை வைத்துதான் அன்றாட ரோந்து பணி செய்ய முடிகிறது.

25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட வனப் பகுதியை 11 நிரந்தர ஊழியர்கள் மற்றும் வேட்டைத் தடுப்பு காவலர்கள் மூலம்தான் பாதுகாக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வன விலங்குகளை வேட்டையாடுபவர்களை முழுமையான அளவில் கண்காணிப்பது என்பது சிரமமான காரியமாக உள்ளது. எனவே வன வளங்களை முழுமையாக பாதுகாக்க வேண்டுமானால் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

Next Story