மாநிலத்தின் சொந்த வருவாயிலேயே வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வோம் - அமைச்சர் கந்தசாமி


மாநிலத்தின் சொந்த வருவாயிலேயே வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்வோம் - அமைச்சர் கந்தசாமி
x
தினத்தந்தி 22 March 2018 4:15 AM IST (Updated: 22 March 2018 3:29 AM IST)
t-max-icont-min-icon

மாநிலத்தின் சொந்த வருவாயிலேயே வளர்ச்சி திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம் என்று அமைச்சர் கந்தசாமி கூறினார்.

புதுச்சேரி,

புதுவை அரசின் சமூக நலத்துறையும், மத்திய அரசின் மாற்று திறனுடையோர் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனமும் இணைந்து புதுச்சேரி மாநிலத்தில் மாற்று திறனாளிகளுக்கு இலவச முடநீக்கு உபகரணங்களை வழங்குவதற்கு பயனாளிகளை தேர்வு செய்வதற்கான 3 நாட்கள் முகாமை நடக்கின்றன. இந்த முகாம் தொடக்க நிகழ்ச்சி சமூகநலத்துறை அலுவலகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி கலந்துகொண்டு முகாமினை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

புதுவையில் மாற்று திறனாளிகளுக்கு தேவைப்படும் பொருட்களை வாங்க மத்திய அரசிடம் நிதி கேட்டோம். அப்போது நிதி வேண்டுமா?பொருள் வேண்டுமா? என்று கேட்டனர். பணத்தை பெற்று பொருள் வாங்குவதற்கு காலதாமதம் ஆகும் என்பதால் பொருளாக கொடுத்துவிடுங்கள் என்று கேட்டு வாங்கியுள்ளோம்.

மாற்று திறனாளிகளுக்கு என்ன செய்ய வேண்டுமோ? அதை எங்கள் அரசு நிதி தட்டுப்பாடு இருந்தாலும் செய்துவருகிறது. புதுவை மாநிலத்துக்கு ரூ.6,500 கோடி தரவேண்டும் என்று பிரதமர் வந்தபோது கேட்டுள்ளோம். அதைக்கொடுத்தால் அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் அனைவருக்கும் சம்பளம் போடுவதுடன் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுத்துவிடலாம்.

புதுவை மாநிலத்தின் வருவாயை உயர்த்தி சொந்த வருவாயிலேயே திட்டங்களை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். இதற்கு எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமியும் ஒத்துழைப்பு தருவார். நிதி தட்டுப்பாடு இருக்கும் காரணத்தினால் புதிய திட்டங்கள் தொடங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. இதற்கு விரைவில் தீர்வு வரும்.

இவ்வாறு அமைச்சர் கந்தசாமி பேசினார்.

நிகழ்ச்சியில் என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ., சமூக நலத்துறை உதவி இயக்குனர் ரத்னா உள்பட பலர் கலந்துகொண்டனர். 

Next Story