வளவந்தாங்கல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


வளவந்தாங்கல் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 22 March 2018 3:57 AM IST (Updated: 22 March 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

வளவந்தாங்கல் கிராமத்தில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்று கிராம மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மாமல்லபுரம்,

காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த காரணை ஊராட்சிக்கு உட்பட்ட வளவந்தாங்கல் கிராமத்தில் 250 குடும்பத்தை சேர்ந்த 6 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டுகளாக எந்தவித அடிப்படை வசதியும் இல்லாமல் இந்த கிராம மக்கள் தனித்தீவில் வசிப்பது போல் வசித்து வருகின்றனர்.

சாலை வசதியும் இல்லாமல் கற்கள் பெயர்ந்து காணப்படுகிறது. குறிப்பாக 30 குழந்தைகள் பயிலும் அங்கன்வாடி கட்டிடம் எப்போது இடிந்து விழும் என்ற நிலையில் உள்ளது. அதன் அருகில் உள்ள 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் அதன் தூண்களும் இடிந்து விழும் நிலையில் உள்ளது.

அதேபோல் இங்குள்ள ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் உள்ள 20 தொகுப்பு வீடுகளின் சிமெண்டு பூச்சு கலவை பெயர்ந்து, மேற்கூரை எப்போது இடிந்து விழும் என்ற பயத்தில் அங்கு வசித்து வரும் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர்.

குடிநீர் தொட்டி இருந்தும் அதில் தண்ணீர் வரவில்லை. உடைந்த நிலையில் உள்ள குழாய்களும் இதுவரை சரி செய்யப்படவில்லை. இதனால் சரிவர குடிநீர் வசதியும் இல்லாததால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் அருகில் உள்ள மற்றொரு கிராமத்திற்கு சென்று அங்கிருந்து தண்ணீர் கொண்டு வரும் அவல நிலை உள்ளது.

சாலை வசதி, குடிநீர் வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றும், இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டி, அங்கன்வாடி கட்டிடம், தொகுப்பு வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்றும், 30 ஆண்டு கால பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு வளவந்தாங்கல் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து கிராம மக்கள் சார்பில் முன்னாள் கவுன்சிலர் காரணை ராதா மாவட்ட கலெக்டருக்கு மனு அனுப்பியுள்ளார். 

Next Story