விருத்தாசலத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


விருத்தாசலத்தில் காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 March 2018 3:30 AM IST (Updated: 22 March 2018 5:11 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய கோரி காலி குடங்களுடன் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விருத்தாசலம், 

விருத்தாசலம் நகராட்சிக்குட்பட்ட 27-வது வார்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு நகராட்சி சார்பில் தினந்தோறும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களாக இந்த வார்டுக்குட்பட்ட என்.பி.கே. தெரு மக்களுக்கு வினியோகிக்கப்படும் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி நகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை வைத்தனர். ஆனால் இதுவரை நகராட்சி நிர்வாகத்தினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் நேற்று காலை நகராட்சி நிர்வாகம் மூலம் வினியோகப்பட்ட குடிநீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றத்துடனும், புழுக்களுடனும் வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் காலி குடங்களுடன் தெருமுனையில் திரண்டனர்.

பின்னர் அவர்கள் சுகாதாரமான குடிநீர் வழங்க கோரி கண்டன கோஷங் கள் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த விருத்தாசலம் போலீசார் மற்றும் நகராட்சி அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சுகாதாரமான குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டு, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story