எதிரியை விரட்ட இணைந்த கரங்கள்
புறநானூற்றுப் பாடலை கொண்டு கற்பனையாக இங்கே ஒரு கதை வடிக்கப்பட்டிருக்கிறது.
இருபெருந் தெய்வமும் உடனின் றாங்கு
உருகெழு தோற்றமொடு உட்குவர விளங்கி
இன்னீ ராகலின் இனியவும் உளவோ
இன்னும் கேண்மீன் உம்இசை வாழியவே
ஒருவீர் ஒருவீர்க்கு ஆற்றுதிர்;
இது புறநானூற்றுப் பாடலில் வரும் ஒரு பாட்டு. இந்தப் பாடலைப் பாடியவர் காவிரிப் பூம்பட்டிணத்து காரிக்கண்ணனார். சோழ மன்னனான குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனும், வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பாண்டியன் பெருவழுதியும் ஒற்றுமையாய் இருக்கக் கண்டு, புலவர் பாடியதுபோல் அமைந்த பாடல் இது.
இந்தப் பாடலின் வரிகளைக் கொண்டு, கற்பனையாக இங்கே ஒரு கதை வடிக்கப்பட்டிருக்கிறது.
கடைச்சங்கம் கண்டு கொண்டிருந்த மதுரையின் மீதும், காவிரித் தாயின் அரவணைப்பில் செழித்திருந்த புகாரின் மீதும் என்றுமே பகைவர்களுக்கு ஒரு கண்தான். அந்த ஆக்கிரமிப்பு உணர்வுதான், வடக்கத்திய பகுதியை ஆண்ட ஒரு மன்னனின் மனதையும் ஆக்கிரமித்திருந்தது. அருகருகே இருந்தாலும் பாண்டியனுக்கும், சோழனுக்கும் ஒற்றுமையே கிடையாது என்பதை நன்கு உணர்ந்த வடக்கத்திய படை அது.
தனித்தனியே பாண்டியனும், சோழனும் என்றுமே பகைவர்களுக்கு சிம்ம சொப்பனம். என்றாலும் ஒற்றுமையே இல்லாத அவர்கள் இருவருக்கும் நடுவே, தந்திர வேலைகளை செய்து கலகங்களை மூட்டி விட்டால் போதும், அடித்துக் கொண்டு சாவார்கள் என்பது அனைவரும் அறிந்தது. அப்படியொரு யுக்தியைக் கையாண்டு, பாண்டிய மற்றும் சோழப் பகுதிகளைக் கைப்பற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் தான், தன்னுடைய பெரும் படையுடன் உள்ளே நுழைந்திருந்தான் அந்த வடக்கத்திய மன்னன்.
தொண்டைநாடு வழியாக, அரவ நாட்டின் மீது தாக்குதல் நடத்த ஒரு படையும், கொல்லிமலை வழியாக புகார் நகரின் உள்ளே நுழைய மற்றொரு படையும் ஆயத்தமானார்கள்.
இரவு வேளை தாக்குதல் நடத்துவதற்கு தகாதது. எதிரிகள் அறியாத வகையில் தாக்கி, அவர்களின் படைகளுக்கு சேதம் ஏற்படுத்தலாம் என்ற ஒரு காய் நகர்த்தல் அதில் இருந்தாலும், தன்னுடைய படைகளும் அதிக சிரமங்களையும், சேதங்களையும் சந்திக்கும் வாய்ப்பு அதிகம் என்று வடக்கத்திய மன்னன் கருதினான். எனவே விடிவதற்காக காத்திருக்கத் தொடங்கினான்.
வடக்கத்திய படைக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக, கதிரவன் தன் கதிர்கள் அனைத்தையும் ஒரே இடத்தில் கொட்டித் தீர்த்தான். வடக்கத்திய படையின் படைத்தலைவனும், மன்னனுமான அவன், தாக்குதலுக்குத் தயாரானான்.
அந்த வேளையில்.. தூரத்தில் குதிரை ஒன்று, புழுதியைக் கிளப்பிக்கொண்டு, தங்களின் படையை நோக்கி வருவதை மன்னன் கவனித்தான். அவன் படையில் இருந்த வில் வீரர்கள் அனைவரும், ஒரே நேரத்தின் வில்லில் அம்புகளைப் பூட்டி, தங்கள் மார்போடு இழுத்துப் பிடித்தார்கள். விரலை விட்டு விட்டால் போதும், அம்புகள் சாரைசாரையாய் பாய்ந்து, அந்த குதிரை வீரனை சல்லடை சல்லடையாக்கி விடும். ஆனால் அவர்கள் அதைச் செய்யவில்லை.
ஏனெனில் அந்தக் குதிரை வீரன், வடகத்திய படையின் ஒற்றன். அவனது புயல் வேகத்தைப் பார்த்து, அவன் ஏதோ ஒரு செய்தியைக் கொண்டு வருவதை உணர்ந்த வடக்கத்திய மன்னனும், அவனது படைகளும் அமைதி காத்தன.
படைகளுக்கு அருகாமையில் வந்ததும், அந்தக் குதிரைவீரன் குதிரையில் இருந்து குதித்து, நிலைத்து நிற்க முடியாமல் மண்ணில் புரண்டெழுந்து, தன்னுடைய மாமன்னனின் முன்பாகப் போய் நின்றான். அவனது முகம் வெளுத்துப் போய் இருந்தது. இந்தப் புவனத்தையே, தன்னுடைய அகண்ட வாய்க்கும் அடக்கிவிடும் ஏதோ ஒரு பயங்கரமான உருவத்தைக் கண்டதுபோல அரண்டிருந்தது அவன் முகம்.
வடக்கத்திய ஒற்றனுக்கு பேச்சு வரவில்லை.
அவனுடைய வாயில் இருந்து வந்த சொற்கள் இது மட்டும் தான்.. ‘சென்று விடுங்கள்.. திரும்பிச் சென்று விடுங்கள்...’
அந்த வார்த்தைகளைக் கேட்டதும், வடக்கத்திய மன்னனின் கோபம் உச்சம் தொட்டது. ‘திரும்பிச் செல்வதற்காகவா, இவ்வளவு பெரிய படையைத் திரட்டிக்கொண்டு இங்கே வந்திருக்கிறோம்’ என்று நினைத்தவன், அதே சினத்தோடு ‘எதற்காக அப்படிச் சொல்கிறாய்?’ என்று கேட்டான்.
மன்னனின் சினத்தைக் கண்டு அந்த ஒற்றனின் வாய் திறந்தது. ‘சோழனும்.. பாண்டியனும் ஒன்றாய் படை திரட்டி, இருபது காத தூரத்தில் தான் நின்று கொண்டிருக்கிறார்கள். அந்தப் படை இந்த உலகமே அவர்களை எதிர்த்து நின்றாலும், இரண்டே நாளில் ஒரு உயிர் கூட மிஞ்சாது அழித்து விடும் வல்லமை படைத்ததாக இருக்கிறது’ என்று கூறியபடி மயங்கி விழுந்தான்.
வடக்கத்திய மன்னனில் தொடங்கி, அவனோடு வந்த படைவீரர்கள், படையில் இணைந்திருந்த குதிரை, யானை போன்ற விலங்குகள் வரை வியர்த்து விட்டது.
அதே வேளையில்.. சோழனும், பாண்டியனும், தங்கள் பெரும் படையோடு ஒற்றுமையாய் எடுத்து வைத்த முதல் அடியை, வலியைப் பொறுத்துக் கொண்டு பெருமிதத்தோடு தாங்கிக்கொண்டாள், பூமித்தாய். இருபெரும் அரசர்களின் படைகள் எடுத்து வந்த அந்த அடியின் அதிர்வை, வடக்கத்திய படையாலும் உணர முடிந்தது.
‘இவர்கள் ஒற்றுமையாய் போரிட்டால், இவர்களை வெல்ல இந்த உலகம் கூட பத்தாது என்பதை மனதார உணர்ந்த வடக்கத்திய மன்னன் தன் படைகளோடு வந்தவழியே தெறித்து ஓடினான்.
அவன் எதிர்க்க நினைத்தது குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் எனும் சோழ மன்னனையும், கடைச்சங்க பாண்டிய மன்னன் வெள்ளியம் பலத்துத் துஞ்சிய பாண்டியன் பெருவழுதியையும்.
Related Tags :
Next Story