வி.ஐ.பி. ரசிகர்கள்!
சர்வதேச கிரிக்கெட் அணிகள் மோதும் மைதானங்களில் சில வி.ஐ.பி. ரசிகர்களைப் பார்க்கலாம்.
இந்தியாவின் சுதிர் கவுதம், வங்காளதேசத்தின் சோயப் அலி, இலங்கையின் கயான் சேனநாயகே, அடிப்படையில் பாகிஸ்தானியராக இருந்தாலும் இந்திய ரசிகராக மாறிவிட்ட முகமது பஷீர் ஆகியோரைப் பற்றித்தான் கூறுகிறோம்.
பொறி பறந்த சமீபத்திய முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரின்போதும் வழக்கமான உற்சாகத்துடன் இவர்களைக் காண முடிந்தது.
முக்கியமான போட்டிகள் என்றில்லை, தங்களின் அபிமான அணி செல்லும் எல்லா இடங்களுக்கும் இவர்கள் நிழல் போல பின்தொடர்கிறார்கள்.
உதாரணத்துக்கு, முத்தரப்பு தொடரை ஒட்டி கொழும்பில் வங்காளதேச அணி விளையாடிய பயிற்சிப் போட்டியில் பார்வையாளர் பகுதி வெறிச்சோடி இருந்தது. ஆனால் வங்காளதேச வீரர்களை ஊக்குவிக்கும்விதமாக, ‘சபாஷ்... சபாஷ் பாய்ஸ்’ என்று ஓர் ஒற்றைக் குரல் ஓங்கி ஒலித்துக்கொண்டிருந்தது. அது, சோயப் அலியுனுடையது.
அதேபோல இந்திய அணி பயிற்சியில் ஈடுபட்டபோதெல்லாம் ‘இந்தியா... இந்தியா...’ என்று முழங்கிக்கொண்டிருந்தார், ‘சாச்சா சிகாகோ’ என்று அன்போடு அழைக்கப்படும் முகமது பஷீர்.
உடம்பெங்கும் புலி போல வண்ணமும், வங்காளதேசத்தின் கொடியையும் தீட்டிக்கொண்டு, சளைக்காமல் அந்நாட்டின் கொடியை ஆட்டிக்கொண்டிருக்கும் சோயப் அலி சமீபமாக அதிக கவனத்தை ஈர்க்கிறார்.
வங்காளதேச தலைநகர் டாக்காவில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர், ‘மெக்கானிக்’ சோயப்.
ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராய் சோயப் தனது பயணத்தைத் தொடங்கியதற்கும் சச்சின் தெண்டுல்கருக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது.
2012 மார்ச் 16 அன்று, இந்தியா- வங்காளதேசம் இடையிலான ஆசிய கோப்பை போட்டியில்தான் சச்சின் தனது 100-வது சர்வதேச சதத்தை விளாசினார்.
“சச்சின் நூறாவது சதம் கண்ட அந்தப் போட்டி, என் வாழ்க்கையையே மாற்றி விட்டது. சுதிர் கவுதமும், ‘சாச்சா’ முகமது பஷீரும் இந்தியாவுக்காக தீவிரமாய் குரல் கொடுப்பதைக் கண்ட நான், நாமும் நமது அணிக்கு அவர்களைப் போல ஆதரவு அளிக்க வேண்டும் என்று தீர்மானித்தேன். எனது எண்ணத்துக்கு ஏற்ப அந்த ஆசிய கோப்பை போட்டியில் எங்கள் அணியும் அருமையாய் ஆடியது” என்று சந்தோஷம் பொங்கச் சொல் கிறார்.
சக ரசிகர்கள் மத்தியில் சோயப், சுதிர், பஷீர் ஆகியோர் வி.ஐ.பி. ரசிகர்களாய் உலா வருகிறார்கள். இவர்கள், அவரவர் அணி வீரர்களின் அன்பைப் பெறுவதும் உண்டு.
இப்படி ஒரு நல்ல பக்கம் இருந்தால், எதிர்மறை பக்கமும் இருக்கத்தானே செய்யும்?
மைதானத்தில் தனித்துத் தெரியும் இந்த ரசிகர்களை, எதிர் அணி ரசிகர்கள் எரிச்சலோடு பார்க்கிறார்கள். இந்தியாவின் சுதிர், ஒருமுறை வங்காளதேசத்தில் அந்நாட்டு ரசிகர்களால் துரத்தித் துரத்தித் தாக்கப்பட்டிருக்கிறார்.
அதேபோல, தங்கள் அணியின் வெற்றியில் அளவில்லாத ஆனந்தம்கொள்ளும் இந்த வி.ஐ.பி. ரசிகர்கள், தமது அணி தோற்கும்போது சோகத்தில் சுருண்டுவிடுகிறார்கள்.
“நெருக்கமான போட்டியில் எங்கள் அணி தோற்கும்போதெல்லாம் நான் துக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் கண்ணீர்விட்டுக் கதறிவிடுவேன்” என்கிறார், சோயப் அலி.
ஆக, சமீபத்தில் இவரை தினேஷ் கார்த்திக் ரொம்பவே அழவைத்திருப்பார்!
Related Tags :
Next Story