ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை


ஓட்டப்பிடாரம் அருகே பரிதாபம் குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை
x
தினத்தந்தி 23 March 2018 2:45 AM IST (Updated: 22 March 2018 6:10 PM IST)
t-max-icont-min-icon

ஓட்டப்பிடாரம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

கோவில்பட்டி,

ஓட்டப்பிடாரம் அருகே குழந்தை இல்லாத ஏக்கத்தில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். அவருடைய உடலை பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதை கண்டித்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குழந்தை இல்லை

ஓட்டப்பிடாரம் அருகே முறம்பன் காலனி தெருவை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 29). விவசாயியான இவர் ஆடுகளை வளர்த்து வருகிறார். இவருடைய மனைவி சுபா பிரியதர்ஷினி (26). இவர்களுக்கு, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு குழந்தை இல்லை. இதனால் சுபா பிரியதர்ஷினி, ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

குழந்தை இல்லாத ஏக்கத்தில் அவர், கடந்த சில நாட்களாக மனமுடைந்த நிலையில் இருந்தார். அவர் நேற்று முன்தினம் இரவில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் உடல் கருகிய அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

உதவி கலெக்டர் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்ததும், மணியாச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ஞானசம்பந்தன், ஓட்டப்பிடாரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். தற்கொலை செய்த அவருடைய உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணமான 5 ஆண்டுகளில் இளம்பெண் தீக்குளித்து தற்கொலை செய்ததால், கோவில்பட்டி உதவி கலெக்டர் அனிதா மேல் விசாரணை நடத்தி வருகிறார்.

சாலைமறியல்


முன்னதாக நேற்று மதியம் அவருடைய உடலை பரிசோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டதாக கூறி, அவருடைய குடும்பத்தினர், உறவினர்கள் கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரி முன்பு சாலைமறியலில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், கோவில்பட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெபராஜ், கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ராஜ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலைமறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பின்னர் மாலையில் அவருடைய உடலை டாக்டர்கள் பரிசோதனை செய்து, அவருடைய குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Next Story