தூத்துக்குடி–திருச்செந்தூர் பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவில் பகுதியில் வெடிகுண்டு வைக்க வந்த 3 பேர் சிக்கினர்


தூத்துக்குடி–திருச்செந்தூர் பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி கோவில் பகுதியில் வெடிகுண்டு வைக்க வந்த 3 பேர் சிக்கினர்
x
தினத்தந்தி 23 March 2018 2:30 AM IST (Updated: 22 March 2018 8:00 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று தொடங்கியது. இதில், கோவில் பகுதியில் வெடிகுண்டு வைக்க வந்த 3 பேரை போலீசார் பிடித்ததால் பரபரப்பு காணப்பட்டது.

பாதுகாப்பு ஒத்திகை


கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு போலீஸ் குழுமம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த போலீசார் கடற்கரையில் இருந்து 5 கடல் மைல் வரை கடலுக்குள் ரோந்து சென்று கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுப்பது, கடத்தலை தடுப்பது தொடர்பாக “சாகர் கவாச்“ என்ற பெயரில் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நேற்று நடத்தப்பட்டது. கடலோர பாதுகாப்பு போலீசார் மற்றும் கடலோர காவல்படையினர் இணைந்து இந்த ஒத்திகை நிகழ்ச்சியை நடத்தினர்.

இதையொட்டி கடலோர காவல்படை, கடற்படையை சேர்ந்த வீரர்கள், தீவிரவாதிகள் போன்று வேடம் அணிந்து கடல் வழியாக ஊடுருவி முக்கிய இலக்குகளை தாக்குவதற்கு அனுப்பப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் கடலோர பாதுகாப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) சைரஸ் தலைமையில் சப்–இன்ஸ்பெக்டர்கள் வசந்தகுமார், ஜானகிராம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். கடலோர பகுதிகளில் உள்ள போலீசார் மற்றும் உளவுப்பிரிவினரும் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். தீவுகளிலும் சோதனை நடத்தினர்.

முயல் தீவில் ரோந்து

அப்போது தூத்துக்குடி கடல் வழியாக படகில் வந்த 4 பேர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் அருகே உள்ள முயல்தீவுக்கு வந்தனர். அப்போது அங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் 4 பேரையும் மடக்கி பிடித்தனர். இதே போன்று தூத்துக்குடி பழைய துறைமுகம் அருகே 14 கடல் மைல் தூரத்தில் படகில் பதுங்கி இருந்த 9 பேரையும் போலீசார் மடக்கி பிடித்தனர். உரிய விசாரணைக்கு பிறகு 13 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

நேற்று காலை 6 மணிக்கு தொடங்கி இந்த பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று(வெள்ளிக்கிழமை) மாலை 5 மணி வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

வெடிகுண்டு வைக்க வந்த 3 பேர் பிடிபட்டனர்


திருச்செந்தூர் கோவில் கடற்கரை பகுதியில் ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு முருகேசன், கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷீஜாராணி தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கோவிலில் இருந்து கடற்கரைக்கு செல்லும் பகுதியில் சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் தமிழக கமாண்டோ படை வீரர்களான கார்த்திக், திருமலைகுமார், கடலோர காவல்படை வீரரான அருண்குமார் என்பதும், அவர்கள் மாறுவேடத்தில் திருச்செந்தூர் கோவிலில் டம்மி வெடிகுண்டு வைக்க வந்ததும் தெரியவந்தது. அவர்களை போலீசார் பிடித்ததை தொடர்ந்து பரபரப்பு நிலவியது. இதையடுத்து கடலோர பாதுகாப்பு ஒத்திகை வெற்றி பெற்றதாக போலீசார் தெரிவித்தனர். இன்றும் (வெள்ளிக்கிழமை) கடலோர பாதுகாப்பு ஒத்திகை நடக்கிறது.

Next Story