மலை போல் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்


மலை போல் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
x
தினத்தந்தி 23 March 2018 3:00 AM IST (Updated: 23 March 2018 12:06 AM IST)
t-max-icont-min-icon

அம்பத்தூர் மண்டல அலுவலகம் அருகே மலை போல் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதனை உடனே அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பத்தூர்,

அம்பத்தூரில், மண்டல அலுவலகத்திற்கு அருகில் வானகரம் சாலையை ஒட்டி மாநகராட்சி சார்பில் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்பட்டு, கடந்த 20 வருடங்களுக்கு மேலாக இங்கு கொட்டப்பட்டு வரும் குப்பைகள் 5 ஏக்கர் பரப்பளவில் குவிந்து மலை போல் காட்சியளிக்கிறது.

வருடக்கணக்கில் குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பை கழிவுகளை இரவு நேரங்களில் மாநகராட்சி அதிகாரிகள் தீ வைத்து விடுகின்றனர். இதனால் ஏற்படும் புகை அந்த பகுதி முழுவதும் சூழ்ந்து பெரும் புகை மண்டலமாக மாறி வருகிறது.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மூச்சுத்திணறல், ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச கோளாறுகளால் பாதிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சாலை தெரியாத அளவுக்கு புகை சூழ்ந்துள்ளதால், அம்பத்தூர்–வானகரம் சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

ஏற்கனவே மலை போல் குவிந்துள்ள குப்பைகளில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாலும், மழைக்காலங்களில் குப்பைகளுடன் சேர்ந்து நீர் தேங்குவதாலும் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு நிலவும் அபாயம் உள்ளது. இந்த குப்பை மேடு கொசுக்கள், வி‌ஷப்பூச்சிகள் மற்றும் வண்டுகளின் புகலிடமாக மாறி உள்ளது.

இதனால் கொசுக்கள், வித விதமான பூச்சிகள் அப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு அழையா விருந்தாளியாக நுழைந்து குடியிருப்புவாசிகளுக்கு தொல்லை கொடுத்து வருகிறது. நீண்ட காலமாக குப்பைகள் கொட்டப்பட்டு வருவதால் இதனை சுற்றியுள்ள அத்திப்பட்டு, அய்யப்பாக்கம், ஜ.சி.எப் காலனி குடியிருப்பு, உள்ளிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளதாக தெரிகிறது.

தமிழக அரசு, பணியில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு போலீஸ் உயரதிகாரிகளுக்கு இந்த குப்பை கிடங்குக்கு அருகில் வீடு கட்டி கொள்ள நிலம் ஒதுக்கியது. ஆனால் சிலர் இந்த குப்பை கழிவுகளின் இன்னல்களால் வீடு கட்ட முடியாமலும், வீடு கட்டிய சிலரும் அந்த வீட்டில் குடியிருக்க முடியாததால் வீடு மற்றும் வீட்டு மனைகளை சொற்ப விலைக்கு விற்றுவிட்டதாக கூறப்படுகிறது.

விடிவுகாலம் எப்போது?

இந்த குப்பை கிடங்கினால் அருகில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், தொழிற்சாலைகளில் வேலை பார்ப்பவர்கள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மக்களுக்கு நோய்களை பரிசளிக்கும் வகையில் அமைந்துள்ள குப்பை கிடங்கினை அகற்றும்படி அப்பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் சாலை மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடத்தினர்.

அம்பத்தூர் மண்டல அதிகாரி, மண்டல சுகாதார அதிகாரி, பொறியாளர் என சம்பந்தப்பட்டவர்கள் அனைவரிடமும் மனு அளித்தும் எந்த பலனும் இல்லை என்றும் இந்த மோசமான நிலையில் இருந்து எப்போது விடிவுகாலம் பிறக்கும்? எனவும் பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.

அதிகாரிகள் சொல்வது என்ன?

பொதுமக்களின் இந்த குற்றச்சாட்டு குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘குப்பை கிடங்கு அமைந்துள்ள இடத்தில் விரைவில் பூங்கா அமைக்கப்பட உள்ளது. அப்போது குப்பைகள் முழுவதுமாக அகற்றப்படும்’ என்றனர். ஆனால் பூங்கா அமைக்கப்படுவதற்கான பணிகள் எப்போது தொடங்கும்? என்ற கேள்விக்கு அவர்கள் பதிலளிக்க மறுத்து விட்டதாக தெரிகிறது.

கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தங்களை பாடாய் படுத்தி வரும் குப்பை கிடங்கினை உடனே அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட அதிகாரிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story