திருப்பூர் குமரன்சிலை அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


திருப்பூர் குமரன்சிலை அருகே மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 March 2018 3:30 AM IST (Updated: 23 March 2018 12:08 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், 

தமிழ்நாடு மின்வாரிய அனைத்து ஒப்பந்த தொழிலாளர்கள் கூட்டமைப்பின் திருப்பூர் மாவட்ட கிளை சார்பில் குமரன்சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர்கள் சுரேஷ்குமார், அன்பு ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், மின்சார வாரியத்தில் ஆயிரக்கணக்கான ஒப்பந்த ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலான பணிகளை செய்தும் இதுவரை ஒப்பந்த அடிப்படையிலேயே சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்து ஏற்பட்டாலோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டாலோ எந்த ஒப்பந்த ஊழியர்களுக்கும் இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இதனால் ஒப்பந்த அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ள ஊழியர்களை மின்சார வாரியத்தில் நிரந்தரமாக பணி புரிய வாரியம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

இதற்கான உத்தரவை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும், ஒப்பந்த ஊழியர்களாக பணியாற்றும் அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கி அங்கீகாரம் அளிக்க வேண்டும். இதுமட்டுமின்றி மின்வாரியத்தில் பெரும்பாலான பணிகளை செய்யும் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச தினக்கூலியை வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைகளில் பதாகைகளை ஏந்திக்கொண்டு கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் பல்லடம், தாராபுரம், காங்கேயம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஒப்பந்த ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

Next Story