தோ‌ஷம் கழிப்பதாக கூறி மோசடி; போலி சாமியார் உள்பட 2 பேர் கைது


தோ‌ஷம் கழிப்பதாக கூறி மோசடி; போலி சாமியார் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 23 March 2018 4:45 AM IST (Updated: 23 March 2018 12:13 AM IST)
t-max-icont-min-icon

விருகம்பாக்கத்தில் ஆயுள்தோ‌ஷம் கழிப்பதாக கூறி முதியவரிடம் மோசடியில் ஈடுபட்ட போலி சாமியார் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவர்களின் கூட்டாளிகள் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னை விருகம்பாக்கம் சாய் நகரைச் சேர்ந்தவர் ரகுராஜ்(வயது 75). இவர், தன்னுடைய மனைவியுடன் தனியாக வசித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர்களது வீட்டுக்கு ஒரு காரில் 4 பேர் வந்தனர்.

அதில் ஒருவர், ‘‘நான் மிகவும் சக்திவாய்ந்த சாமியார். இந்த வீட்டில் வசிக்கும் உங்கள் இருவருக்கும் ஆயுள்தோ‌ஷம் உள்ளது. அதனை நிவர்த்தி செய்யவும், ஆயுளை அதிகரிக்கவும் ஒரு பூஜை செய்யவேண்டும். அதற்கு முதலில் ரூ.95 ஆயிரம் செலவு ஆகும்’’ என்றார்.

அதனை உண்மை என்று நம்பிய ரகுராஜ், தோ‌ஷம் கழிக்க பூஜை செய்ய ஒப்புக்கொண்டார். உடனே சாமியார் உள்பட 4 பேரும், ரூ.5 ஆயிரம் கொடுத்தால் பூஜைக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வந்து விடுவோம் என்று கூறினர்.

அவர்களிடம் ரகுராஜ் ரூ.5 ஆயிரம் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட 4 பேரும் காரில் ஏறி அங்கிருந்து சென்று விட்டனர். நீண்டநேரம் ஆகியும் அவர்கள் திரும்பி வரவில்லை. அப்போதுதான் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த ரகுராஜ், இதுபற்றி விருகம்பாக்கம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பதிவான மர்மநபர்கள் வந்து சென்ற காரின் பதிவு எண்ணை வைத்து தலைமறைவான 4 பேரையும் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு விருகம்பாக்கம், நடேசன் நகர் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தபோது, அது ரகுராஜிடம் தோ‌ஷம் கழிப்பதாக கூறி பணம் மோசடியில் ஈடுபட்ட மர்மநபர்கள் பயன்படுத்திய கார் என்பது தெரிந்தது.

காரில் வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அதில் அவர்கள், திருவள்ளூரைச் சேர்ந்த பிரகாஷ்(52) மற்றும் அவரது கார் டிரைவர் ராஜேந்திரன்(36) என்பது தெரியவந்தது.

பிரகாஷ், சாமியார் போல் தாடி, கழுத்தில் ருத்ராட்சை மாலை, காவி உடை அணிந்துகொண்டு சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்களை குறிவைத்து, ஆயுள்தோ‌ஷம் கழிப்பதாக கூறி பூஜை செய்ய வேண்டும் என்று அவர்களிடம் பணத்தை பறித்து மோசடியில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டு இருந்தார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து போலி சாமியார் பிரகாஷ், ராஜேந்திரன் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கார் மற்றும் ரூ.4 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இவர்கள் வேறு எங்கெல்லாம் இதுபோன்று மோசடியில் ஈடுபட்டு உள்ளார்கள்? என போலீசார் விசாரித்து வருகின்றனர். தலைமறைவாக உள்ள இவர்களின் கூட்டாளிகளான மேலும் 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story