கடும் வறட்சியிலும் நீர் நிரம்பியுள்ள மரபணு பூங்கா குளங்களால் மக்கள் மகிழ்ச்சி
கடும் வறட்சியிலும் ராமநாதபுரம் மரபணு பூங்காவில் மக்களை மகிழ்விக்கும் வகையில் குளங்களில் தண்ணீர் நிரப்பி உள்ளது அனைவரையும் கவர்ந்து வருகிறது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் அருகே பால்கரை கிராமத்தின் அருகில் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் தோட்டக்கலைத்துறை சார்பில் ஐந்தினை மரபணு பூங்கா அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த பூங்காவில் பாலை தினைக்குரிய செடிகள் வளர்க்கப்பட்டு பொழுதுபோக்கு அம்சமாகவும் திகழ்ந்து வருகிறது. எந்தவொரு பொழுதுபோக்கு அம்சங்களும் இல்லாத ராம நாதபுரம் நகரில் இந்த பூங்கா மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக திகழ்ந்து வருகிறது. இங்கு அமைக்கப்பட்டுள்ள குளம் மற்றும் நீரோடை போன்றவற்றில் கடும் வறட்சி காரணமாக தண்ணீரின்றி வறண்டு காணப்பட்டது.
இதன்காரணமாக இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு இயற்கை சூழ்ந்த பச்சை பசேல் பசுமை நினைவுகளை ஏற்படுத்துவதில் குறை ஏற்பட்டது. இந்த குறையை போக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேளாண்மை துறையின் சார்பில் பூங்காவில் உள்ள குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு உள்ளது.
இதற்காக பூங்காவின் அருகில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள பண்ணை குட்டை போன்ற பெரிய குளத்தில் நிறைத்து வைக்கப்பட்டுள்ள தண்ணீரை மோட்டார் வைத்து குழாய்கள் மூலம் கொண்டு வந்து பூங்காவில் உள்ள குளத்தில் நிரப்பப்பட்டு உள்ளது. இந்த பூங்காவின் நுழைவு வாயில் பகுதி மற்றும் உள்புற பகுதிகளில் அமைந்துள்ள 2 குளங்களிலும் தண்ணீர் முழுமையாக நிரப்பப்பட்டுள்ளது. இதன்காரணமாக பூங்காவிற்கு வருபவர்கள் கடும் கோடையிலும், வறட்சி நிலவும் நிலையில் இந்த பகுதியில் மட்டும் தண்ணீர் நிரம்பி ரம்மியமாக காட்சியளிப்பதை கண்டு வியந்து மனம் மகிழ்ந்து செல்கின்றனர். சிறியவர் முதல் பெரியவர் வரை பூங்காவிற்கு ஆர்வமுடன் வந்து பாலைதினைக்குரிய மரங்களை, செடிகளை, இயற்கை சூழல் அமைப்புகளை ரசித்து மனநிறைவுடன் செல்கின்றனர்.
Related Tags :
Next Story