மதுரை ரெயில் நிலைய பல்முனை பயன்பாட்டு வளாகத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டி சாய்ப்பு


மதுரை ரெயில் நிலைய பல்முனை பயன்பாட்டு வளாகத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டி சாய்ப்பு
x
தினத்தந்தி 23 March 2018 3:30 AM IST (Updated: 23 March 2018 3:57 AM IST)
t-max-icont-min-icon

மதுரை ரெயில் நிலைய பல்முனை பயன்பாட்டு வளாகத்தில் அனுமதியின்றி மரங்கள் வெட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை, 

மதுரை ரெயில்நிலையத்தின் கிழக்கு நுழைவுவாயில் பகுதியில் இருந்த காலியிடத்தில் இந்திய ரெயில்வே கட்டுமான கழகத்தின் சார்பில் பயணிகளுக்கான பல்முனை பயன்பாட்டு வளாகம் கட்டப்பட்டுள்ளது. இந்த வளாகம் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், ரெயில்வே விதித்த தொகைக்கு ஏலம் எடுக்க யாரும் வராததால் பயனற்று சேதமடைந்த நிலையில் காணப்பட்டது. இதற்கிடையே, தனியார் நிறுவனம் ஒன்று கடந்த 3 மாதங்களுக்கு முன்பு அந்த வளாகத்தை குத்தகைக்கு எடுத்தது. இந்த வளாகத்தில் பயணிகள் தங்குவதற்கான அறைகள், சலூன் கடை, மருந்து கடை, அத்தியாவசிய பயணப்பொருட்கள் கடை, உணவகம் என பல்வேறு வசதிகள் இருக்க வேண்டும் என்ற நிபந்தனை உள்ளது.

மதுரை கோட்ட ரெயில்வே நிர்வாகத்துக்கு அந்த இடத்துக்கான வாடகை மட்டும் வழங்க வேண்டும். பல்முனை பயன்பாட்டு வளாகத்தை சுற்றிலும் வேம்பு, கொங்கு உள்பட பலவகையான மரங்கள் உள்ளன. இந்த நிலையில், வளாகத்தின் முன்பகுதியில் உள்ள மரங்களை கோட்ட நிர்வாகத்தின் அனுமதியின்றி வெட்டுவதாக தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கோட்ட மக்கள் தொடர்பு அலுவலர் வீராசுவாமி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மரத்தை வெட்டுவதற்கு அனுமதியில்லை என்று தெரிவித்தார். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. திலகர்திடல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அதன்பின்னர், மரம் வெட்டிக்கொண்டிருந்தவர்கள் அங்கிருந்த மரத்தை வெட்டுவதை நிறுத்தி விட்டனர். அத்துடன், ஏற்கனவே வேறுடன் வெட்டிய ஒரு மரத்தை மட்டும் ரெயில்நிலைய பார்சல் அலுவலகத்தின் முன்பு குழியை தோண்டி நட்டுவிட்டனர். அதாவது, மரங்களின் கிளைகளை மட்டும் வெட்டிக்கொள்ள கோட்ட மேலாளர் அனுமதியளித்துள்ளார்.

ஆனால், விதியை மீறி அங்கிருந்த மரங்களை வெட்டி சாய்க்க முற்பட்டுள்ளனர். இதில் 2 மரங்கள் அனுமதியின்றி வெட்டப்பட்டதாக தெரிகிறது.

Next Story