உற்பத்தி சம்பந்தமான புதிய கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சியாளர்களும், தொழில் முனைவோரும் ஈடுபட வேண்டும்


உற்பத்தி சம்பந்தமான புதிய கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சியாளர்களும், தொழில் முனைவோரும் ஈடுபட வேண்டும்
x
தினத்தந்தி 23 March 2018 4:53 AM IST (Updated: 23 March 2018 4:53 AM IST)
t-max-icont-min-icon

உற்பத்தி சம்பந்தமான புதிய கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சியாளர்களும், தொழில்முனைவோரும் ஈடுபட வேண்டும் வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் கூறினார்.

வேலூர்,

வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் வி.ஐ.டி. எந்திரவியல், ரசாயன பொறியியல் பள்ளி, அமெரிக்கா எந்திரவியல் பொறியாளர் சங்கம் இணைந்து ‘மெக்னோவேட்-18’ என்ற தேசிய அளவிலான 4 நாள் கருத்தரங்கை நடத்துகின்றன. இதன் தொடக்கவிழா நேற்று நடந்தது. வி.ஐ.டி. எந்திரவியல், ரசாயன பொறியியல் பள்ளி முதல்வர் என்.அறிவழகன் வரவேற்றார். கருத்தரங்கின் நோக்கம் குறித்து அதன் அமைப்பாளர் அந்தோனி சேவியர் விளக்கி கூறினார்.

விழாவிற்கு வி.ஐ.டி.வேந்தர் ஜி.விசுவநாதன் தலைமை தாங்கி பேசியதாவது:-

வி.ஐ.டி. நிறுவனம் தொடங்கப்பட்டு 34 ஆண்டுகள் ஆகிறது. எந்திரவியல், பொறியியல் படிப்பவர்களுக்கு எங்கு சென்றாலும் வரவேற்பு கிடைக்கும். ஐரோப்பா, அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் உற்பத்தி துறையில் முன்னணியில் உள்ளன. நமது நாட்டை பொறுத்தவரை உற்பத்தி துறையில் பின்தங்கியுள்ளோம். நாட்டில் ஏற்றுமதியின் அளவு குறைந்து இறக்குமதியின் அளவு அதிகரித்து வருகிறது.

பிரதம மந்திரியின் கனவு திட்டங்களின் ஒன்றான ‘மேக் இன் இந்தியா’ திட்டம் நாட்டின் உற்பத்தி துறைக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு உற்பத்தி சம்பந்தமான புதிய கண்டுபிடிப்புகளில் ஆராய்ச்சியாளர்களும் தொழில்முனைவோரும் ஈடுபட வேண்டும். வி.ஐ.டி. புதிய கண்டுபிடிப்புக்கான ஆராய்ச்சிகளில் ஈடுபட மாணவர்களை ஊக்குவித்து வருகிறது. அதன் மூலம் ஆராய்ச்சி இதழ்களை வெளியிடுவதில் முன்னணியில் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில், திருவனந்தபுரத்தில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய மூலப்பொருட்கள் உற்பத்தி குழு இயக்குனர் பாணு பந்த் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசுகையில், ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன. வி.ஐ.டி. இளங்கலை பொறியியல் மாணவர்களையும் ஆராய்ச்சி பணிகளில் ஈடுபடுத்தி வருவது பாராட்டத்தக்கது’ என்றார்.

முன்னதாக டெல்லியில் நடைபெற்ற ஆசிய அளவிலான ஆற்றல் திறன் இல்லாத வாகன வடிவமைப்பு போட்டியில் வெற்றி பெற்ற வி.ஐ.டி. மாணவர் குழுவினருக்கு வேந்தர் ஜி.விசுவநாதன் விருது வழங்கினார்.

இதில் விக்ரம் சாராபாய் விண்வெளி ஆராய்ச்சி மைய அலுவலர் நாராயணமூர்த்தி, வி.ஐ.டி. இணை துணைவேந்தர் நாராயணன், உற்பத்தி துறை பேராசிரியர்கள் கே.தேவேந்திரநாத் ராம்குமார், நாகேஸ்வரராவ் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பேராசிரியர் ஜெயபாண்டியராஜன் நன்றி கூறினார். 

Next Story