மானூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு வயல் அறுவடையில் மின்கம்பியையும் சேர்த்து பிடித்ததில் பரிதாபம்


மானூர் அருகே மின்சாரம் தாக்கி பெண் சாவு வயல் அறுவடையில் மின்கம்பியையும் சேர்த்து பிடித்ததில் பரிதாபம்
x
தினத்தந்தி 24 March 2018 2:30 AM IST (Updated: 23 March 2018 6:24 PM IST)
t-max-icont-min-icon

மானூர் அருகே, வயலில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

மானூர்,

மானூர் அருகே, வயலில் மின்சாரம் தாக்கி பெண் பரிதாபமாக இறந்தார்.

விவசாய கூலி வேலை

நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள மேலப்பிள்ளையார்குளம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மணி. அவருடைய மனைவி கருப்பம்மாள் (வயது 55). விவசாய கூலி வேலை செய்து வந்தார். அப்பகுதியை சேர்ந்த முருகன் என்பவருக்கு சொந்தமான வயலில் நெல் அறுவடை பணிகள் நடந்து வந்தன. இதில் கருப்பம்மாள் உள்பட 3 பெண்கள் வேலை செய்து வந்தனர்.

அந்த வயலுக்குள் நின்ற மின்கம்பத்தில் இருந்து மின்கம்பி அறுந்து வயலில் கிடந்துள்ளது. இதனை கவனிக்காமல் கருப்பம்மாள் ஒரு கையில் கதிர் அறுக்கும் அரிவாளை வைத்துக் கொண்டு மறுகையால் நெற்பயிரை பிடித்து அறுக்கும் போது, அருகே அறுந்து கிடந்த மின்சார கம்பியையும் சேர்த்து பிடித்துள்ளார். இதனால் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது.

மின்சாரம் தாக்கி சாவு

இதில் கருப்பம்மாள் ஆ வென அலறியபடி கீழே விழுந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற இருவரும் ஓடி வந்து பார்த்தனர். அங்கு மின்சாரம் தாக்கி கருப்பம்மாள் பரிதாபமாக இறந்து போனது தெரியவந்தது. இதுகுறித்த தகவல் கிடைத்ததும் மானூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அருண் நாராயணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கருப்பம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கருப்பம்மாளுக்கு 2 மகன்களும், 2 மகள்களும் உள்ளனர்.

வயலில் கூலி வேலைக்கு சென்ற பெண் மின்சாரம் தாக்கி இறந்து போன சம்பவத்தால் பிள்ளையார்குளம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

Next Story