நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் மோதல்


நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் திடீர் மோதல்
x
தினத்தந்தி 24 March 2018 3:00 AM IST (Updated: 23 March 2018 9:04 PM IST)
t-max-icont-min-icon

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் திடீரென்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் கூட்டத்தில் விவசாயிகள் திடீரென்று மோதிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

குறை தீர்க்கும் கூட்டம்

நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் பொறுப்பு வகிக்கும் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம் தலைமை தாங்கினார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சந்திரா ராணி, வேளாண்மை துணை இயக்குனர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

காப்பீட்டு தொகை

கூட்டம் தொடங்கியதும் அதிகாரி முத்துராமலிங்கம் பேசுகையில், நெல்லை மாவட்டத்தில் இந்த ஆண்டு (2018) வழக்கத்தை விட சற்று கூடுதலாக, அதாவது 121.57 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. 11 அணைகளில் 21.6 சதவீதம் நீர்இருப்பு உள்ளது. பிசான பருவத்தில் 60 ஆயிரத்து 230 ஹெக்டேர் பரப்பளவில் நெல் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் நடந்து வருகிறது. நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து 10 ஆயிரத்து 220 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு உள்ளது. விவசாயிகள் 39 ஆயிரத்து 322 பேருக்கு ரூ.86 கோடி பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்பட்டு உள்ளது. 2016–ம் ஆண்டு வறட்சியால் பாதிக்கப்பட்ட 457 தென்னை விவசாயிகளுக்கு ரூ.14 லட்சத்து 55 ஆயிரத்து 809 விவசாயிகளின் வங்கி கணக்கில் இழப்பீட்டு தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளது’’ என்றார்.

ஆனால் முன்கூட்டியே காப்பீட்டு தொகை செலுத்தியவர்களுக்கு இழப்பீடு தொகை வரவில்லை என்று விவசாயிகள் குற்றம்சாட்டினர். அதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.

விவசாயிகள் மோதல்

இதைத்தொடர்ந்து நெல்லை அருகே உள்ள கருங்காடு கிராமத்தை சேர்ந்த விவசாயி மாடசாமி, கிணறு தோண்டுவதற்கு ரூ.8 லட்சம் மானியம் தருவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் நீண்ட போராட்டத்துக்கு பிறகு ரூ.4 லட்சம் மட்டுமே வழங்கப்பட்டது. மீதி உள்ள ரூ.4 லட்சத்தை தராமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். எனவே உடனே மானிய தொகையை வழங்க வலியுறுத்தி அதிகாரிகள் முன்பு விவசாயி மாடசாமி தரையில் அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

அப்போது அவருக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அதிகாரிகளுக்கு ஆதரவாகவும், மாடசாமிக்கு எதிராகவும் கோ‌ஷங்கள் எழுப்பினர். மேலும் கூட்ட அரங்கின் நடுவே வந்து தர்ணாவில் ஈடுபட்ட மாடசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. கைகலப்பும் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் கூட்ட அரங்கில் 20 நிமிடங்கள் வரை கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. இதைக்கண்ட அதிகாரிகள் மற்றும் போலீசார் இருதரப்பு விவசாயிகளையும் சமாதானப்படுத்தி அமைதியை ஏற்படுத்தினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

கோரிக்கை மனு

இதைத்தொடர்ந்து விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். அவர்களுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர். மேலும் விவசாயிகள் அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் வெள்ள உபரிநீர் கால்வாய் மேம்பாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில், தாமிரபரணி–நம்பியாறு–கருமேனியாறு இணைப்பு திட்டத்தில் ஆண்டுதோறும் ஒதுக்கீடு செய்யப்படும் பணம் திருப்பி அனுப்பப்படுகிறது. இந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யும் பணத்தை கொண்டு சரிவர பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கு தேவையான 52 அதிகாரிகள், ஊழியர்களை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

Next Story