கிருஷ்ணா நதிநீர் வரத்து வினாடிக்கு 35 கனஅடியாக குறைந்தது


கிருஷ்ணா நதிநீர் வரத்து வினாடிக்கு 35 கனஅடியாக குறைந்தது
x
தினத்தந்தி 24 March 2018 4:30 AM IST (Updated: 24 March 2018 12:27 AM IST)
t-max-icont-min-icon

பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் வரத்து வினாடிக்கு 35 கனஅடியாக குறைந்தது.

ஊத்துக்கோட்டை,

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளில் ஒன்றாக பூண்டி ஏரி உள்ளது. கிருஷ்ணா நதிநீர் பங்கீடு திட்டத்தின் படி ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு 12 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விட வேண்டும்.

அதன்படி கடந்த டிசம்பர் மாதம் 27-ந்தேதி முதல் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் கடந்த ஜனவரி மாதம் 2-ந்தேதி பூண்டி ஏரியை வந்தடைந்தது.

கண்டலேறு அணையில் இருந்து அதிகபட்சமாக வினாடிக்கு 2 ஆயிரத்து 450 கனஅடி தண்ணீர் வரை திறக்கப்பட்டது. இது பூண்டி ஏரிக்கு அதிக அளவாக வினாடிக்கு 610 கனஅடி வரை வந்து சேர்ந்தது. தற்போது கண்டலேறு அணையில் நீர்மட்டம் வெகுவாக குறைந்ததால் பூண்டி ஏரிக்கு திறக்கப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக குறைக்கப்பட்டு உள்ளது.

கண்டலேறு அணையின் மொத்த கொள்ளளவு 68 டி.எம்.சி.யில் தற்போது வெறும் 6.8 டி.எம்.சி. மட்டும் தண்ணீர் உள்ளது. இதையடுத்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு வினாடிக்கு 300 கனஅடியாக குறைக்கப்பட்டது.

இதனால் பூண்டி ஏரிக்கு வரும் கிருஷ்ணா நீர்வரத்து வினாடிக்கு 35 கனஅடியாக குறைந்தது. இதையடுத்து கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறப்பு இன்னும் ஒரு சில நாட்களில் நிறுத்தப்படும் என தெரிகிறது. நேற்று காலை நிலவரப்படி பூண்டி ஏரியில் 1,833 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பு உள்ளது.

மொத்த கொள்ளளவு 3 ஆயிரத்து 231 மில்லியன் கன அடி. சென்னை குடிநீர் தேவைக்காக பேபி கால்வாயில் வினாடிக்கு 19 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. புழல் ஏரிக்கு லிங்க் கால்வாய் மூலம் வினாடிக்கு 360 கனஅடி தண்ணீர் செல்கிறது.


Next Story