குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து 4 துறை அதிகாரிகள், கிராம மக்கள் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம்


குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து 4 துறை அதிகாரிகள், கிராம மக்கள் விசாரணை அதிகாரியிடம் வாக்குமூலம்
x
தினத்தந்தி 24 March 2018 4:30 AM IST (Updated: 24 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

குரங்கணி காட்டுத்தீ விபத்து குறித்து விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ராவிடம் 4 துறைகளை சேர்ந்த அதிகாரிகள், கிராம மக்கள் நேற்று வாக்குமூலம் அளித்துள்ளனர்.

தேனி,

தேனி மாவட்டம், போடி அருகே குரங்கணி மலைப்பகுதியில் கடந்த 11-ந்தேதி ஏற்பட்ட காட்டுத்தீயில், மலையேற்ற பயிற்சிக்கு சென்ற சுற்றுலா பயணிகள் சிக்கிக் கொண்டனர். இந்த தீ விபத்தில் இதுவரை 20 பேர் பலியாகி உள்ளனர். இந்த விபத்து குறித்து விசாரணை நடத்த தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலாளரும், மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான அதுல்யா மிஸ்ரா நியமிக்கப்பட்டார்.

தீவிபத்து குறித்து விசாரிப்பதற்காக விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா நேற்று முன்தினம் குரங்கணி மலைப்பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார். நேற்று காலை 8 மணியளவில் அவர் மீண்டும் குரங்கணிக்கு சென்றார். குரங்கணி மலைப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள வனத்துறை கண்காணிப்பு கோபுரத்துக்கு சென்றார். அங்கு இருந்தபடி தொலைநோக்கி கருவி உதவியுடன் மலைப்பகுதியை பார்வையிட்டார்.

பின்னர் அவர் போடி நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். அங்கு அவர் மீட்பு பணியில் ஈடுபட்ட அலுவலர்கள், பொதுமக்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணைக்கு வந்தவர்கள் அவரிடம் வாக்குமூலம் அளித்தனர்.

வாக்குமூலம் எழுத்துப்பூர்வமாகவும், வீடியோ பதிவு மூலமும் பெறப்பட்டது. இதற்காக விசாரணை நடந்த கூட்டரங்கில் 15 கணினிகள் வைக்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு கணினிக்கும் தட்டச்சு அலுவலர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். 2 கணினிகளுக்கு ஒரு தாசில்தார் வீதம் கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டனர். வீடியோ பதிவு செய்வதற்காக 2 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

முதலில் ஒவ்வொருவராக அழைத்து அதுல்யா மிஸ்ரா விசாரணை நடத்தினார். சம்பவம் குறித்து விவரங்களை கேட்டறிந்தார். வாக்குமூலம் அளித்தவர்கள் சொன்னதில் முக்கிய விவரங்களை அவர் குறிப்பெடுத்துக் கொண்டார்.

பின்னர், வாக்குமூலத்தை கணினி முன்பு இருந்த தட்டச்சு அலுவலர்களிடம் அவர்கள் தெரிவித்தனர். ஒவ்வொருவரின் வாக்குமூலமும் முழுமையாக தட்டச்சு செய்யப்பட்டு அவை நகல் எடுக்கப்பட்டது. அந்த நகல், வாக்குமூலம் அளித்தவரிடம் கொடுக்கப்பட்டு சரிபார்க்கப்பட்டது. கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்ட தாசில்தார் முன்னிலையில் வாக்குமூலம் சரிபார்த்து, சம்பந்தப்பட்டவர்களிடம் கையொப்பம் பெறப்பட்டது.

அதைத்தொடர்ந்து வாக்குமூலம் அளித்த ஒவ்வொருவரும் வீடியோ ஒளிப்பதிவு குழுவின் முன்பு மீண்டும் வாக்குமூலம் அளித்தனர். அவை முழுமையாக பதிவு செய்யப்பட்டது. இதில், வனத்துறை தரப்பில் 21 பேர், போலீஸ் துறை தரப்பில் 17 பேர், வருவாய்த்துறை தரப்பில் 4 பேர், தீயணைப்புத்துறை தரப்பில் 9 பேர், 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் 2 பேர், குரங்கணி, கொழுக்குமலை, முந்தல் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் 16 பேர், கோரிக்கை மனு அளிக்க வந்த 4 பேர் என மொத்தம் 73 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. காலை 11.50-மணிக்கு வாக்குமூலம் பெறும் நடைமுறை தொடங்கியது. மாலை 4.30 மணி வரை வாக்குமூலம் பெறப்பட்டது.

எழுத்துப்பூர்வமான வாக்குமூலம் மற்றும் வீடியோ பதிவு வாக்குமூல விவரங்கள் விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டன.

போடி நகராட்சி அலுவலகத்தில் குரங்கணி தீ விபத்து தொடர்பான விசாரணைக்கு பிறகு விசாரணை அதிகாரி அதுல்யா மிஸ்ரா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கடந்த 12-ந்தேதி நான் மருத்துவமனைகளுக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்தேன். அப்போது பலர் பேசும் நிலையில் இல்லை. அதில் சிலர் இறந்து விட்டனர்.

எனவே, காயம் அடைந்தவர்கள், காயமின்றி மீட்கப்பட்டவர்களை சந்தித்து விசாரிக்க ஈரோடு, சென்னை பகுதிகளுக்கு செல்ல உள்ளேன். இந்த வாக்குமூலங்களை ஆய்வு செய்து அறிக்கை தயாரிக்கப்படும். தேவைப்பட்டால் மீண்டும் குரங்கணிக்கு வந்து ஆய்வு செய்வேன்.

குரங்கணிக்கு தான் மலையேற்றம் சென்றார்கள் என்ற தகவல் முன்கூட்டியே வனத்துறையினருக்கு தெரியுமா என்பதை அவர்கள் கொடுத்துள்ள வாக்குமூலத்தை கொண்டு ஆய்வு செய்யப்படும். அனுமதி இல்லாத பகுதியில் மலையேற்றம் சென்றுள்ளனர். இதற்கு முன்பும் பலர் மலையேற்றம் சென்றுள்ளனர். எனவே, இதற்கு முன்பு அனுமதியின்றி மலையேற்றம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதா என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. வனத்துறை ஊழியர்கள், அதிகாரிகள் மீது தவறு இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும்.

முழுமையான விசாரணை அறிக்கை 2 மாதத்துக்குள் அரசுக்கு தாக்கல் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story