காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம், அய்யாக்கண்ணு பேட்டி


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம், அய்யாக்கண்ணு பேட்டி
x
தினத்தந்தி 24 March 2018 4:00 AM IST (Updated: 24 March 2018 12:34 AM IST)
t-max-icont-min-icon

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம் என்று தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில அய்யாக்கண்ணு கூறினார்.

திண்டுக்கல்,

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு, திண்டுக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழக அரசு பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை. தமிழகத்தில் சுமார் 4 கோடி விவசாயிகள் இருக்கிறோம். ஆனால், பட்ஜெட்டில் 10 சதவீதம் கூட விவசாயத்துக்கு நிதி ஒதுக்கவில்லை.

பிரதமர் நரேந்திரமோடி விவசாயிகளின் வருமானத்தை 2 மடங்கு உயர்த்துவதாக கூறினார். அதை இதுவரை செய்யவில்லை. ராணுவ பலம் மட்டும் போதாது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறும் நாடு தான் பலம்பொருந்திய நாடாக இருக்கும். ஆனால், விவசாயத்தை காக்க மத்திய அரசு மறுக்கிறது. தமிழகத்துக்கு தண்ணீர் வழங்க மறுக்கிறார்கள்.

விவசாயத்துக்கு தேவையான தண்ணீர், விளைபொருளுக்கு லாபகரமான விலை ஆகியவை கிடைக்காவிட்டால் விவசாயிகள் ஓடிவிடும் நிலை உருவாகும். இதனால் தனியார் நிறுவனங்கள் மரபணு மாற்ற விதைகளை கொண்டு வருவார்கள். அதனால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும். அதை தடுக்கவே போராட்டம் நடத்தி வருகிறோம்.

காவிரி டெல்டா பகுதிகளில் பெட்ரோல், டீசல், ஹைட்ரோகார்பன் எடுத்தால் மத்திய அரசுக்கு ரூ.15 லட்சம் கோடி வருமானம் கிடைக்கும். அதற்காகவே அந்த திட்டங்களை கொண்டுவர நினைக்கிறார்கள். ஆனால், விவசாயம் அழிந்து விடும். காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். ஒவ்வொரு விவசாயிக்கும் பயிர்க்காப்பீட்டு தொகையாக ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும்.

இந்த ஆண்டும் கடுமையான வறட்சி நிலவுகிறது. அரசு உரிய நடவடிக்கை எடுத்து விவசாயிகளுக்கு உதவ வேண்டும். சுப்ரீம் கோர்ட்டு 6 வாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கடைசிநாளான 29-ந்தேதி வரை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

அதற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால், எங்கள் சங்கத்தின் சார்பில் பிரதமர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடருவோம். பிரதமர் மீட்டு முன்பு தூக்கு கயிற்றை மாட்டிக் கொண்டு போராட்டம் நடத்துவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Next Story