திருப்பூர் மாநகர பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ மேம்பாட்டிற்கான நிலஅளவை பணி தொடங்கியது


திருப்பூர் மாநகர பகுதிகளில் ‘ஸ்மார்ட் சிட்டி’ மேம்பாட்டிற்கான நிலஅளவை பணி தொடங்கியது
x
தினத்தந்தி 24 March 2018 4:00 AM IST (Updated: 24 March 2018 1:00 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் மாநகர பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டிற்கான நில அளவை பணி தொடங்கியது.

திருப்பூர்,

நாடு முழுவதும் முக்கியமான நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் திட்டத்தை மத்திய அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது. இதற்கான பல கோடி ரூபாயை நிதியாக ஒதுக்கியுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் மிக முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மத்திய அரசு கொண்டுவந்துள்ளது. இது தமிழக மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த பல மாதங்களுக்கு முன்னரே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தாலும் பணிகள் தொடங்கப்படாமலே இருந்து வந்தது. இந்த பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என்று பல்வேறு கட்சியினரும், அமைப்புகளும் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில் திருப்பூரை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. இதன் முதல் கட்ட பணிகளுக்காக நில அளவீடு பணிகளை தற்போது தொடங்கியுள்ளது.

அந்த வகையில் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் திருப்பூருக்குட்பட்ட பழைய பஸ்நிலையம் எதிரே உள்ள குமரன் தினசரி மார்க்கெட், பெருமாள் கோவில் அருகே உள்ள பூமார்க்கெட், புதிய பஸ்நிலையம் அருகில் உள்ள மார்க்கெட்டுக்கு உள்ளிட்டவற்றிற்கு சொந்தமன இடங்களை அளவிடும் பணி கடந்த ஒருசில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. இந்த நிலையில் நேற்று தென்னம் பாளையம் மார்க்கெட்டுக்கு சொந்தமான நிலங்களை அளவிடும் பணி தொடங்கியது. இந்த அளவீடுகள் எடுக்கப்பட்ட பின்னர் இதன் முழு விவரங்களையும் சென்னையில் உள்ள தனி அலுவலகத்திற்கு அனுப்பப்படும் என்றும், விரைவில் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து ஸ்மார்ட் சிட்டி மேம்பாட்டிற்கான நில அளவை பணியில் ஈடுபட்டுள்ள பணியாளர்கள் கூறியதாவது:-

நாடு முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் திருப்பூரில் முதல்கட்டமாக மார்க்கெட் பகுதிகளில் நிலங்களை கணக்கெடுத்து அளவிடும் பணி தொடங்கப்பட்டுள்ளது. தென்னம்பாளையம் மார்க்கெட்டுக்கு சொந்தமாக 17 ஏக்கர் நிலம் உண்டு.

இதில் மீன் மார்க்கெட், உழவர் சந்தை உள்ளிட்ட விற்பனை கூடங்களும் அடங்கும். இதில் தற்போது தென்னம்பாளையம் காய்கறி மார்க்கெட் எத்தனை ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. மற்ற விற்பனை கூடங்கள் எத்தனை ஏக்கரில் செயல்பட்டு வருகிறது. இவற்றில் ஆக்கிரமிப்பு எவ்வளவு இருக்கிறது. இவற்றை மீட்டு சந்தையை மேம்படுத்துதல் குறித்த தகவல்களை சேகரித்து சென்னை அலுவலகத்திற்கு அனுப்ப உள்ளோம். மேலும், சந்தையை ஒட்டிய சாலைகளின் நிலை அவற்றை மேம்படுத்துவது குறித்தும் அளவீடு செய்யப்படும். முதல்கட்ட பணிகள் முடிவடைந்ததும் அடுத்தக்கட்ட பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story