பல்லடம் அருகே சோக சம்பவம்: பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி


பல்லடம் அருகே சோக சம்பவம்: பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
x
தினத்தந்தி 24 March 2018 3:45 AM IST (Updated: 24 March 2018 1:01 AM IST)
t-max-icont-min-icon

பல்லடம் அருகே பாறைக்குழி தண்ணீரில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்தனர்.

மங்கலம்,

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த மங்கலம் இடுவாயை சேர்ந்தவர் தென்னரசு. பனியன் நிறுவனத்தில் தையல் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ராதா. இவர்களுடைய மகன் மனோகரன் (வயது 18). இவன் இடுவாயில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். மனோகரனின் நண்பர்களான இடுவாய் பாரதிபுரத்தை சேர்ந்த ராஜேஸ்வரனின் மகன் சுதர்சன் (17) மற்றும் மங்கலத்தை அடுத்த அறிவொளிநகரை சேர்ந்த சாகுல்ஹமீதுவின் மகன் சமீர்கான் (17) ஆகியோரும் அதே பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தனர்.

மாணவர்கள் 3 பேரும் நேற்று காலையில் வீட்டில் இருந்து பள்ளிக்கு தேர்வு எழுத சென்றனர். பின்னர் தேர்வு எழுதி முடிந்ததும் வீடுகளுக்கு புறப்பட்டு வந்தனர். இந்த மாணவர்கள் 3 பேரும், அந்த வகுப்பில் படிக்கும் மற்ற மாணவர்களும் கபடி விளையாட செல்வதாக தங்களது பெற்றோரிடம் கூறிவிட்டு சைக்கிள்களில் 63 வேலம்பாளையம் அருகே உள்ள எலந்தகுட்டை பாறைக்குழிக்கு சென்றனர். அங்கு அவர்களுடன் படிக்கும் மேலும் 5 மாணவர்களும் சைக்கிளில் வந்துள்ளனர். 15 அடி ஆழம் கொண்ட பாறைக்குழியில் 10 அடி உயரத்திற்கு தண்ணீர் உள்ளது.

பின்னர் மாணவர்கள் மனோகரன், சுதர்சன் மற்றும் சமீர்கான் ஆகிய 3 பேரும் தங்களது ஆடைகள் மற்றும் காலணியை கழற்றி வைத்து விட்டு, ஒருவர் பின் ஒருவராக பாறைக்குழி தண்ணீரில் இறங்கி குளித்தனர்.

பின்னர் அவர்கள் ஆழமான பகுதிக்கு சென்று குளித்தபோது திடீரென்று தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அப்போது அவர்கள் “காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள்” என்ற அபயக்குரல் எழுப்பினார்கள்.

இதற்கிடையே கரையில் நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த மாணவர்களுக்கும் நீச்சல் தெரியாததால் அவர்களால், பாறைக்குழியில் இறங்கி அந்த மாணவர்களை காப்பாற்ற முடியவில்லை. எனவே கரையில் நின்று கொண்டிருந்த மாணவர்கள், அந்தவழியாக சென்று கொண்டிருந்தவர்களிடம் சென்று, மாணவர்கள் 3 பேர் தண்ணீரில் மூழ்கிக்கொண்டு இருப்பதையும், அவர்களை காப்பாற்றும்படியும் கூறினார்கள்.உடனே அந்த வழியாக சென்றவர்கள் பாறைக்குழியில் இறங்கி தண்ணீரில் மூழ்கிய மாணவர்களை தேடினார்கள். அதற்குள் மாணவர்கள் 3 பேரும் தண்ணீரில் மூழ்கியதால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை.

இதையடுத்து மங்கலம் போலீசாருக்கும், பல்லடம் தீயணைப்புத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி, மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் பல்லடம் தீயணைப்பு படை வீரர்கள் விரைந்து வந்து பாறைக்குழியில் மூழ்கி மாணவர்களை தேடினார்கள். பின்னர் ஒன்றன்பின் ஒன்றாக 3 மாணவர்களின் உடலையும் தீயணைப்பு படை வீரர்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். பாறைக்குழியில் மூழ்கி மாணவர்கள் பலியான சம்பவம் அவர்களின் பெற்றோருக்கும் தெரியவந்ததால், அவர்களும் பாறைக்குழிக்கு திரண்டு வந்தனர்.

பின்னர் மாணவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். கபடி விளையாட செல்வதாக கூறிவிட்டு சென்ற மாணவர்கள் 3 பேர் பாறைக்குழியில் மூழ்கி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story